வரிகள் 40 - 50 : அடுத்தடுத்து் .............செம்பியர்கோன் சொற்பொருள் : அடுத்தடுத்து நிகழ்ந்து சினத்துடன் பொருத போரில் சிறந்த மார்பில் தொண்ணூற்றாறு தழும்புபட்ட உடம்புள்ளவனும், நாட்டு மக்கள் முன்னேறும்படி பிரமவரக்கன் என்ற கொடியோன் மார்பைப் பிளந்து கொன்று சிவபெருமான் திருத்தில்லை நகரத்தை யமைத்தவனும், மன்னர்களெல்லாரும் வந்து பணியுமாறு தன் படையை முன் நடத்திச் சென்று தமிழ் வழங்கும் மதுரைப் பதியையும் ஈழ நாட்டையும் வென்று கொண்டவனும், சூழ்ந்த பல இடங்களிலும் போய் ஒரு பகலில் எல்லாப் பாலைவனங்களையும் கடந்து உதகைக் கோட்டையையழித்துத் தன்னுடைய தூதுவனைக் கண்டு கூட்டிக் கொண்டு வந்தவனும், வேற்றுமையாகப் பகைத்துக் கங்கையாற்றையும் கடாரம் என்ற நாட்டையும் கைப்பற்றி யரியணையில் அமர்ந்திருநத சோழ மன்னனும், விளக்கம் : சீறுஞ் செரு - சீறிப் பொருத செரு. செரு - போர். ஆகத்தோன் - உடம்புடையவன். ஆகம் என்பது மார்பு என்ற பொருளையும் தரும் எனினும் மார்பில் என முன்னர் வந்ததனால் உடம்பு எனப் பொருளுரைக்கப்பட்டது. தொண்ணூற்றாறு விழுப்புண் கொண்டவன் விசயாலய சோழன். இவனைப் பற்றிய குறிப்பு, விக்கி உலா, 29 , 30; இராசராச, 31, 32; சங்கர, 29, 30 காணப்படுகிறது. திருத்தில்லை பார்த்தோன் இன்னான் எனக் கூறுதற்கு வழியின்று. தில்லைவனத்திற் பிரமராக்ஷஸன் இருந்து அச்சுறுத்தினன் எனவும், அவ்வரக்கனைக் கொன்று காட்டினை யழித்து நாடாக்கித் தில்லைநகரமைத்துத் திருக்கோயில் சமைத்து மக்கள் கூத்தப்பெருமானை வணங்கி வழிபட்டுய்யுமாறு செய்தவன் இவன் எனவும் கூறலாம். இவ் வரிகள் இப் பொருளுக்கிடமாக நிற்கின்றன. திரிமுடிச் சோழன் - மும்முடிச் சோழன். மும்முடிச்சோழன் என்ற பெயர், முதல் இராசராசனுக்குச் சாசனங்களில் வந்திப்பதாலும் அவன் வரலாறு வரி 47 , 48 இல் பின்னர்க் கூறப்படுவதாலும் இவனை முதல் இராசராச சோழன் என்று கூறுவதற்கிடமில்லை என்று குறிப்புரை வரைந்துள்ளார். விசயாலயனுக்குப் பின்வந்த ஒரு சோழ மன்னனாவன் என்பது அவர் குறிப்பு. பழையவுரை : எல்லாருங்கண்டு ஈடேறும்படி (31) பரமானந்தத் தாண்டவமாடும் திருத்தில்லைக் கூத்தனது நியதியாலே காவலான பிரமராக்ஷஸனது மார்பைப் பிளந்து திருத்தில்லை நட (ன)ம் பார்த்தோன் இவன் திருமுடிச் சோழன்" என்பது; ஆய்ந்துணர்க. நரபதியர் - மன்னர் : நரர் - மனிதர், பதியர் - தலைவர், எனப் பிரித்துக் காண்க. இது வடமொழித் தொடர் ; நரபதியர் தாழ முன் சென்று என்பதற்கு, தென்னாடு நோக்கிப் போர் மேற்சென்றபோது ஆங்காங்குள்ள சிற்றரசர் வந்து திறை கொடுத்து வணங்க முன்னேறிச் சென்று என விரிவுரை கொள்க. வணங்காத பாண்டியனை வென்று மதுரைப்பதியையும் ஈழ நாட்டரசனை வென்று ஈழ நாட்டினையும் கைப்பற்றினன் எனவும் கொள்க. இவன் முதலாம் பராந்தகன், "வெங்கோல் வேந்தன் தென்னாடு மீழமுங் கொண்டதிறற், செங்கோற்சோழன் கோழி வேந்தன் செம்பியன்" எனக் கண்டராதித்தராற் (திருவிசைப் - 8) பாடப்பெற்றவன் இவனே. "ஈழமும் தமிழ்க்கூடலுஞ்சிதைத் திகல் கடந்ததோரிசை பரந்ததும்" (கலிங். இராச. 23) எனவும், "மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" எனச் சாசனம் கூறுவதும் இதனை வலியுறுத்தும். பழையவுரை, "இவன் கரிகாற்பெருவளத்தான்" என்றது. மதுரைத் தமிழ்ப்பதி, தமிழ்க்கூடல் என வருவன தமிழ்மொழி மதுரையிற் செழித்துத் தழைத்துப் பெருகி யிருந்ததைப் புலப்படுத்தும். "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனைமறுகின் மதுரை" (சிறுபாண்; 66, 67) என வருவதும் காண்க. தூதனை நோக்கினோன் என்பது முதல் இராசராசனையுணர்த்தும். இவன் விடுத்த தூதனைச் சேரமன்னன் மேலாடையை யெடுக்கும்படி கூறி இழிவுபடுத்திச் சிறை வைத்தான் என்பது கேட்டு உடனே புறப்பட்டு ஒரு நாட் பகலில் பதினெட்டுப் பாலைவனங்களையும் கடந்து உதகைமதியலையழித்துச் சேரனை வென்று சேர நாட்டைக் கைப்பற்றித் தூதனைச் சிறை நீக்கி வந்தான் இவன் என்பது வரலாறு. சுரம் - பாலை, இது சேர நாட்டிலுள்ளது என்பது, "வானவரம்ப னன்னாட்டும்பர், வேனனீடிய வெங்கடறு" (அகநா. 389 ; 16, 17 எனக் கூறுவதால் அறியலாம் : பாலைவனம் பதினெட்டு என்பது. விக்கி. உலா 33, 34; இராசரா. 41, 42 : சங்கர. 33, 34; கலிங்கத். இராச. 20 இவற்றாலும் இவன் வரலாறு தோன்றும். அரசரும் அவருடைய தூதுவர் படைத்தலைவர் முதலிய சிறப்புடையவரும் மேலாடை கீழிறக்காமல் எவரையும் சென்று காண்பது அக்காலத் தியல்பு போலும். "போர்வை மடக்கார் பொலியப் புகுதரும் கோயில் மகளிர்" பெருங். 2, 2 : 230, 231 எனவும்; ‘தருக துகிலென வெழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலாமுன், வருகவென வரைமார்பின் வாங்காத வுத்தரியம் வாங்கி யீந்தார்' (வி. பா. சூது. 246) எனவும், ‘சீவரம் போர்த்தல் மத்திம தேசத்தா ராசாரமன்றோ? மூத்தோர்முன் இளையோர் போர்வை வாங்குவதுபோல' (நீலகேசித். 3, 13. உரை) எனவும் வருவன உயர்ந்தோர் மேலாடை யெடார் என்பதையுணர்த்தும். இவனை முடிகொண்ட சோழன் எனப் பழையவுரை கூறுகின்றது. கங்கா நதியும் கடாரமுங் கைக்கொண்டவன், கங்கைகொண்ட சோழன் என்ற பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழதேவன் அவன். கடாரம், மலேயா தீபகற்பத்தில் உள்ளது. இக்காலத்தில் அது கெடா (Kedha) என்ற வழங்கப்படுகிறது. இவன் தன் படைகளை ஏவிக் கங்கையாறு பாயும் நாட்டரசனையும் கடார நாட்டரசனையும் போரில் வென்று கங்கையையும் கடாரத்தையும் தனதாக்கிச் சிங்காதனத்தில் வீற்றிருந்தான் என இராசேந்திர சோழ தேவன் வீரச் சிறப்புக் கூறுகின்றது. எளிதாகக் கைப்பற்றியவன் என்பது குறிப்பு. |