பக்கம் எண் :

14அழகர் கிள்ளைவிடு தூது


முதற் பங்குனி இறுதியாகிய திங்களில் நடைபெறுவன சிறந்த விழாக்களே இங்கு
எடுத்துக் கூறப்பட்டன. மற்றுமுள்ள விழாக்களை ஆய்ந்து அறிக.

பொருள் அமைவு

   அழகர் கோயிலை யடுத்துப் பல பெயர்களுடன் வேறு கோயில்களும் இருக்கின்றன.
நாகநாதர் கோயில், இராக்காயி அம்மன் கோயில், அனுமன் கோயில், கருடன் கோயில்,
பாண்டவர் கோயில், சதிரிளமடவார் கோயில், சக்கரத்தாழ்வார் கோயில், தண்டலைக்
கோயில், வெள்ளி மலைக் கோயில் என்பன அவை. அழகர் கோடைத் திருவிழாவிற்
பவனிவரக் கண்டு மயல் கொண்டு வருந்திய தலைவி யொருத்தி, தான் வளர்த்த
கிளியை நோக்கித் தன் வரலாறு கூறி 'அழகர்பாற்சென்று மாலை வாங்கி வா' வென்று
கூறித் தூது விடுத்ததாக ஆசிரியர் பொருளமைத்திருக்கின்றார். கிளி்யின் மாண்பினை
அத்தலைவி கூறி விளிப்பது முதற் பகுதி. அழகர் என்ற பாட்டுடைத்தலைவர்
மாண்புரைத்து, அரசர்க்குரிய பத்து அங்கங்களையும் எடுத்துக் கூறுவது அடுத்த பகுதி,
கோடைத் திருவிழாவில் அழகர் பவனிவந்த சிறப்பினை விரித்துரைப்பது மூன்றாம்
பகுதி.  நான்காம்  பகுதி,  தலைவி  தன்னிலைமையைக்  கிளிக்குணர்த்துவதும்
தூதுரைக்குந்தகுதியுடையை நீயே எனப் புகழ்வதும் அழகர் அமர்ந்திருக்கும் இடமும்
அமையமுங் கூறித் தூதுரைத்துத் தொடையல் வாங்கி வருகவென விடுப்பதும்
எடுத்துரைக்கின்றது.

கிளியை விளித்தல்

   தலைவி கிளியை நோக்கிக் "கிளியரசே! நீ திருமால் பெயராகிய அரி என்ற
பெயரைப் பெற்றனை; அவர் படுத்துறங்கும் ஆலிலையின் பச்சை நிறமுங்
கொண்டனை; மன்மதனுக்குப் பரியாகி அவனையும் மேற்கொண்டாய்; எல்லார்க்கும்
இன்பஞ் செய்கின்றாய்; எல்லாரும் காதல் விளைந்த போது உன் சொல்லையே கேட்க
விரும்புகிறார்கள்; சூரியன் பச்சைக் குதிரைகள் ஏழும் கூடி ஒற்றைச் சக்கரத்தையுடைய
தேரை அருணன் என்னும் பாகன் செலுத்த இழுத்துச் செல்கின்றன. நீயோ
சக்கரமில்லாத காற்றாகிய மன்மதன் றேரைப் பாகனுமி்ன்றித் தனியே
இழுத்துச் செல்கின்றாய்; அக்குதிரைகள் ஏழும் உனக்கிணையாகுமோ?