மனமகிழ வாய்முத்தங் கொடுப்பதுபோல நீயுமவர்கட்கு முத்தங்கொடுக்க முகம் கோணாய். முத்தங்கொடுத்ததனால் அவர் வாயிதழ்ச் சிவப்பு ஒட்டியதுபோல உன் மூக்குச் சிவந்துள்ளது ஒருவருக்குந் தோன்றா வுருவமுடைய மதனை நீ இழுத்துத் திரிகின்றாய். உனக்குக் குறையுளதோ? இல்லை. வாயுவும் உன் பின்னே வருகின்றது. திருமகளும் பார்வதியும் உன்னைச் செங்கையி்ற் பிடிக்க அவர்கட்கும் நட்பாயினை, பார்ப்பதி நிறமும் திருமால் நிறமும் நின் நிறமும் பச்சையாக வந்தவிதம் எந்தவிதமோ? மாதர் விரலின் நகம் உன் மூக்குப்போல இருப்பதால்தான் கையைப்பார்த்துப் பின் கண்ணாடியைப் பார்க்கும் வழக்கம் பண்டைக்காலமுதல் தோன்றியதுபோலும் கிளையில்லாப் பெருஞ்செல்வம் பயன்படுமோ? நீ விரும்பிப் பற்றினால் மாம்பழம் பெருமைபெறும். பற்றாத பழம் அழுகிச் சாறு வடிந்து சக்கையாகப் போம். அன்னம் உன்னுடைய உணவு. குயில் சின்ன வடிவுடையது. வண்டு முடிச்சவிழ்தது மதுவுண்டாற் பின்பு மயங்கும். கரும்புறாவும் பேச வாயுடையதோ? இல்லை. மயில் பிணிமுகம் என்ற பெயருடையது. ஆதலால் நின்போலச் சுகவடிவுள்ளது அன்று. நீ கல்வி கேள்வியுடையாய். உன் செல்வத்திற் சிறிது அள்ளித் தெளித்தனைபோலும் நாகணவாய்ப் பறவைக்கு ; அதுவும் சிறிது பேசுகின்றது. காமன் சிவன்மேற் போர்க்குச் சென்று நெற்றிக்கண்ணெருப்பால் வெந்து கருகினான். அவன் வில் நாணாகிய வண்டுங் கருகி நிறங் கருப்பாயிற்று. சின்னமாகிய குயிலும் கருகி நிறங் கருப்பாயிற்று. நீதான் மறுப்படாமற் பச்சையாக வந்தாய்போலும். மாம்பழம் கண்டால் விரும்புவாய் ; காய் பூவைக் கண்டால் முகத்தை அவற்றின் பக்கம் திருப்பாமற் செல்லுவாய். தினையரிந்த தாளை வி்ட்டு நீங்காமலிருப்பாய். மனிதருடன் பழகுவாய். எல்லாரையும் முறைகூறி யழைப்பாய். வண்டு வாய் குழறும் ; குயில் மாமரத்திலிருந்து கத்தும் ; கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும் என்று யாவரும் சொல்லும்படி நற்பேர் பெற்றாய். நீ பால் குடிக்கும் பச்சைக்குழந்தையாயினும் நின் கால் பிடிப்பார் கோடி பேர் இருப்பார். | | |
|
|