வையையாற்றிலுந் தூங்குகின்றீரோ? பெண்ணென்றாற் பேயுமிரங்கும் என்பரே ! நீர் ஏன் இரங்காது செல்கின்றீர்? எம்மை யணைந்து இன்பந்தந்து செல்வீர் என்று காமமயக்கத்தாற் புலம்பினேன். நான் புலம்பி நிற்க என் வேண்டுகோளை ஏற்காது தேனூர் மண்டபஞ் சென்று தங்கி மீண்டுஞ் சோலைமலையை யடைந்தார். நான் யானையுண்ட விளங்கனியானேன். வெள்ளை நிலவும் அலைகடலும் அயன் மகளிரும் அனங்கனும் விடைமணியும் வேய்ங்குழலும் எனக்குப் பகையாகி என்னுயிரைக் கவர அமையம்பார்த்து நிற்கின்றன. நான் என்செய்வேன். பசலைநிறம் பாய்ந்து என் கூடு உன் கூடுபோலாயிற்று. ஆதலால், இருவரும் உடம்பு பச்சையாயிருப்பதால் ஒத்திருக்கின்றோம். வேறுபாடின்று உனக்குப் பாலூட்டுவேன்; நீராட்டுவேன்; பட்டாடையால் துடைப்பேன். உன்னைக் கூட்டில் அரசியைப் போலிருக்க அமர்த்துவேன். ஆலத்தியெடுத்துக்காட்டி அகிற்புகையும் காட்டுவேன்; இளவெயிலிற் காயவைத்து முத்தங்கொடுத்து என் கையில் வைத்து அழகர் திருப்பெயரனைத்துங் கற்பிப்பேன். எனக்கு நீ ஓருதவிபுரிவாய்" என்றாள். |
| 'தூதுக்குத் தகுதியுடையை நீ' எனச் சொல்லுதல் |
வெள்ளை யன்னத்தைத் தூதுவிடுத்தால் அது சொல்லுமோ? அது சூடுபட்டது எனத்தெரிகிறது. குயில் தாய்க்குதவாப் பிள்ளை. அஃது எனக்கு உதவி புரியுமோ? வண்டு மதுவுண்டு மயங்கி அரி என்று கற்பித்தால் அளி என்று சொல்லும். தெற்கு எமன் திசை. அத்திசையிலிருந்து வருந் தென்றல் என் காதலை அழகர்க்குக் கூறுமோ? மேகத்தைத் தூது விடலாமோ? அது மாதரையெல்லாந் தூற்றுந்தன்மை யுடையது. காக்கைக்குக் கொடி என்பது பெயர். கொடியார் எனக் காக்கையாரைக் கூறலாம். பரங்கருணையார் ஆகிய அழகர் முன் காக்கையார் போய்த் தூது கூறுவாரோ? கொடியார் என்ற பெயர் பெற்றவர் ஆதலால் போகார். நீதான் போய்த் தூதுகூறுந் தகுதியுடையை. |