பக்கம் எண் :

விளக்க உரை67


ஆடவர் முத்தம் கொடுப்பதுபோல நீயும் முத்தங் கொடுப்பதற்கு
முகம் சிறிதும் கோணாமலிருப்பாய் நாடோறும் அம்மங்கையர்
சிவந்த இதழ்கள் உன் மூக்குப் பட்டுபட்டுச் சிவந்ததோ? உன்
மூக்கில் அவர்களுடைய இதழ் ஒட்டி ஒட்டிச் சிவந்த நிறம்
உண்டாயிற்றோ? (அதுதான் எனக்குத் தோன்றவில்லை)

   (வி - ம்.) வில்லாளனை யுறக்கண்டால் என மாற்றி்ப்
பொருள் காண்க. உறவில்லாளனைக் கண்டால் - பகைவனைக்
கண்டால் என மற்றும் ஒருபொருள் தோன்றுவதும் காண்க.
பெரிய திருவடிகள் என்பது கருடனையுணர்த்தும். சிறிய
திருவடிகள் என்பது ஆதிசேடனை யுணர்த்தும். இது வைண
மதத்திற்குரிய தனிவிதிகள். கருடனுக்குக் கழுத்தில் வெண்மையும்
உடம்பிற் சிவப்பும் இருப்பது போலக் கிளிக்கும் கழுத்திற்
சிவப்பும் உடம்பிற் பசுமையும் இருப்பதனால் அக்கருடன்
பெருமையெல்லாம் உனக்கும் பொருந்தும் என்பது கருத்து.
வளைந்த மூக்கும் வடிவின் சாயலும் கருடன் போலவே
தோன்றுவதால் "வீறெல்லாம் சேர்வாய்" என்றார். இபம்
என்பதற்கு யானையின் மத்தகம் என்று பொருள் கூறலாம்.
கொங்கைக் குவமையாகக் கூறப்படும் பொருளாதலால்.
இபம் -யானை. அது தன் உறுப்புக்களில் ஒன்றாகிய கொம்பு,
மத்தகம் இவற்றை யுணர்த்தலால் பொருளாகு பெயர்
எனக் கொள்க.

25-29: செவ்வி இழந்து ..........வந்தவிதம் எந்தவிதம்

   (சொ - ள்.) அழகு கெட்டுத் தேவர்கட்குந்
தோன்றாதவனாகிய வலிமையுள்ள மன்மதன் என்பவனை நீ
பற்றிக் கொண்டு இழுத்து வந்தால் உனக்கு அதனாற்
குறைவுண்டாகுமோ? (ஆகாது) உண்டு அதனை அடக்கித் தமது
ஆயுளை நீட்டி வாழ்வதற்கு அருமையான முனிவர்
பூரகம்கும்பகஞ் செய்கின்ற வாயுவை நீ உன் பின்னே வரும்படி
செய்கின்றாய். ஒளி விளங்கும் மையணிந்த வேல்போன்ற
விழியுடைய திருமகளும் பார்வதியும் கையிற் பிடித்துக் கொள்ள
நீ அவர்களை நட்புக்கொண்டாய். மெய்யிற்பிடித்திருக்கிற
பச்சைநிறம், திருமாலுக்கும் பார்வதிக்கும் உனக்கும் யாவரும்
விரும்பும்படி வந்தது எந்தவிதமென்று எனக்குத்
தோன்றவில்லை.