(வி - ம்.) கிளி மன்மதனுக்குக் குதிரையாதலால் அதனை "நீ கொண்டு இழுத்தால்" என்றார். தேவர்கட்கும் தோற்றாதவன் அடல் வேள்: அவனை இழுப்பதில் உனக்கு உயர்வேயன்றிக் குறைவில்லை என்பது தோன்ற "குறையுண்டோ" என்றார். நீண்டநாள் வாழ்வது குறித்து முனிவர் வாயுவை உண்டும் உள்ளே யடக்கியும் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்று கூறும் பயிற்சி புரிந்தும் கும்பகம் பூரகம் செய்தும் வருகின்றனர். அத்துணைப் பெருமையுடைய வாயுவை நீ உன் பின்னே வரச் செய்கின்றாய் என்று கிளிக்குப் பெருமை கூறினர். மன்மதனுக்குத் தேர் தென்றற்காற்று. அத் தேரிற் பூட்டப்படுங் குதிரை கிளி, குதிரை முன் செல்லத் தேர் பின்னே செல்வது இயற்கையாதலால் "வாயுவை உன்பின்னே வரவழைப்பாய்" என்றார். பூரகம் - வாயுவை உள்ளே நிரப்புதல். கும்பகம் - நிரப்பிவைத்திருப்பது. தேயசு - ஒளி. மலர்மாது - பூவில் வசிக்கும் பெண். இது திருமகளை யுணர்த்தியது. வங்கணம் - நட்பு. சிறந்த தெய்வப் பெண்களாகிய மலர்மாதும் சங்கரியும் கைப்பிடிக்கும் தோழமை பூண்டாய் நீ; அன்றியும் அச்சுதற்கும் பார்ப்பதி்க்கும் உள்ள பச்சை நிறமும் உனக்குப் பொருந்தியது எனப் பெருமை கூறியபடி இது. 29-32: மெச்சும் குருகே .........பேசாய் (சொ - ள்.) உன் நாக்குக் குறுகியிருப்பதற்குக் காரணம் அரி கீர்த்தனம் பாடியதாலல்லவோ? பெண்கள் எழுந்தவுடன் கையைப் பார்த்துப் பின் முகத்தைப் பார் என்று கூறுவது உன் மூக்குப் போலிருக்கும் விரல் நகங்களை முதலிற் பார்க்க வேண்டும் என்ற கருத்தினால்தான், புகழ் பெற்ற செயலிலே ஆய்ந்தால் கிள்ளை யடையாத பெரிய தனம் வீண் அல்லவோ நீ சொல்வாய். (வி - ம்.) கூழை - குறுகியது. அரி - திருமால். கீர்த்தனம் - இசையோடு பாடு்ம் பாட்டு. பெண்கள் எழுந்தவுடன் கைவிரலைப் பார்த்துப் பின் கண்ணாடியால் முகத்தைப் பார்க்கவேண்டும் என்பது பண்டைக்கால முறை. அதற்குக் காரணம் கூறுவார் போன்று உன் மூக்குக்கு உவமையாகும் விரலைப் பார்க்கின்றனர் எனச் சிறப்புக் காட்டினர். கீர்த்தி - புகழ். கிரியை - செயல். கிள்ளை என்பது கிளியின் பெயர். கிளியில்லாத பெருஞ் செல்வம் பயனற்றது அல்லவோ? அதனாலன்றோ செல்வர் கிளிகளை வைத்து வளர்க்கின்றனர் என்று பொருள் கொள்க. கிளை என்பது கிள்ளை யெனச் செய்யுளில் விரித்தல் விகாரமாக வந்தது எனக் கொண்டு சுற்றத்தார் சேராத பெரிய செல்வம் வீணானது | | |
|
|