பக்கம் எண் :

70அழகர் கிள்ளைவிடு தூது


கொண்ட பறவையொன்று உண்டோ? கற்று அறிந்த கல்வியும் பிறர் சொல்லக் கேட்ட
கேள்வியும் நீ பெற்றிருக்கின்றாய் அக்கல்வி கேள்வியாகிய செல்வத்திற் சிறிது
நாகணவாய்ப் பறவைக்கு அள்ளித் தெளித்தாய் போலும். (அதனால் அதுவும்
பேசுகிறது.)

   (வி - ம்.)
கரும்பு உறா வார்த்தை - கரும்பின் சுவை பொருந்தாத மொழி என்பது
வேறு வெளிப்பொருள். பிணி முகமே என்பது நோயைத் தன்னிடத்தே கொண்டது
என்பது வேறு வெளிப்பொருள், சாரிகை - நாகணவாய். இது சிறிது குழறிப்
பேசுகின்றது என்பது தோன்ற, "உன் செல்வமதி லள்ளித் தெளித்தாயோ?" என்றார்.
ஒவ்வொன்றுக்கும் குறைபாடு இருப்பதால் இவை அத்தனையும் தூது
சொல்லத்தக்கனவல்ல என்பது கருத்து.

38-44: சொல்வேதம் மென்பரி ..........பேதம் ஈதே


   (சொ - ள்.) சொல்லுகின்ற வேதம் என்னும் மெல்லிய குதிரை நான்குக்கும்
பிரமன் சாரதியானான்; விற்பிடித்த காமனுடைய குதிரையே (கிளியே) உனக்குச் சாரதி
யார்? (ஒருவரும் இலரே.) வலிய போரிற் சென்று பொருந்திய சிவன் நெற்றிக்கண்
நெருப்பால் காமனுடல் கருகி அவன் வில் நாணியும் (வண்டும்) கருகி அவன்
சின்னமாகிய கூவுங்கரிய குயிற் பறவையும் கருகிப் பாவம்போல நின்று கறுப்பு
நிறமாகிய மறுவடைந்து வந்தபோது நீதானே நடுப்படையிற் சென்று மறுப்படாதே
வந்தாய். எப்போதும் மாமரத்திற் காய்த்த பழமென்றால் இனிமையாக நுகர்வாய்;
அதனையல்லாமற் காய் பூ என்றால் அவற்றை உன் நாக்காலும் மூக்காலும் கோதி
யறுத்துக் கீழே யுதிர்ப்பாய்; அவற்றின் முகத்தைப் பாராய். செல்வம் நீங்காமல் நல்ல
கரிய மேன்மையான தினையை யீன்ற கதிர் அறுத்த தினைத்தாளை விட்டு நீங்காய்;
எனக்குள்ள இரண்டு கைகள் உனக்கில்லை; உனக்குள்ள சிறகுகள் இரண்டும் எனக்கும்
இல்லை; நம்மிருவர்க்குமுள்ள வேறுபாடு இதுவே.

   (வி - ம்.) சிவபெருமான் திரிபுரத்தின்மேற் போருக்கெழுந்தபோது பூமி தேர்,
சூரியன் சந்திரன் சக்கரங்கள், வேதம் நான்கும் குதிரைகள், பிரமன் தேர்ப்பாகன்,
இமயமலை வில்,