பக்கம் எண் :

விளக்க உரை75


உடம்பிற் பூசி மங்கையர் குளிப்பாட்டுவதால் "நலங்குக் கிளிப்பிள்ளாய்" என்றார்,
குளிப்புள்ளாய் என்ற பாடத்திற்கு நல்ல கூட்டுப் பொருள்களுடன் நீராடுதல் உடையாய்
எனப் பொருள் கொள்க. வளி - காற்று. மன்மதனுக்குத் தென்றற் காற்றுத் தேர்
ஆதலால் அதனை இழுத்துச் செல்லும் புரவி கிளி என்பது தோன்ற
"வளிப்பிள்ளைதன்னை......சம்பத்தாய்" என்றார். சம்பத்து - நிறைவு. எங்கும் நிறையும்
காற்றை நீ எடுத்துச் செல்வதாற் பெருஞ்செல்வமுடையை எனப் பெருமை தோன்ற
நின்றது அது. பின்னை - திருமகள். இது நப்பின்னையையும் குறிக்கும். தத்தை - கிளி ;
இது தத்தாய் என ஐ ஆய் ஆகி விளியாயிற்று.

63-65 : முத்திநகர் .............பாவாய்

   (சொ - ள்.) முத்தி தரும் நகர்களில் ஒன்றின் பெயருடையாய் ! இயல் இசை
நாடகம் என்ற மூன்று தமிழ்க்குரிய எழுத்துக்களுள் வல்லின வெழுத்து ஆறில்
ஒன்றாகிப் பொருந்திய தகரவரியமைந்த பெயருடையாய்! தூய்மையாகிய ஐந்து
பூதங்களில் ஒன்றின் பெயருடையாய் ! அரசர்க்காகிய படை நான்கில் ஒன்றின்
பெயருடையாய் ! முதலிற்றோன்றிய முதற்பொருள்களாகிய மூவரில் ஒருவன்
பெயருடையாய் ! மக்களடையும் இரண்டு பயன்களில் ஒன்றின் பெயருடையாய் !
கண்ணிமைபோல நான் காக்கும் பொருளே ! எனக்குக் கண் போன்றாய் ! என்
பக்குவமான கண்ணிலுறையும் கண்மணி போன்றாய் !

   (வி - ம்.) முத்தி தரும் நகரங்கள் ஏழு. அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி,
அவந்திகை, துவாரகை என்பன. அவந்திகை என்பது கிளியின் பெயர். தகரவரியமைந்த
பெயர் தத்தை. இது கிளிக்குப் பெயர் எனக் காண்க. நிலம், நீர், தீ, காற்று, வானம்
என்பன ஐந்து பூதங்கள். இவற்றில் ஒன்று தீ எனக் கொள்க. தீக்கு வன்னி என்பது
மற்றொரு பெயர். அதுவே கிளிக்கும் பெயராயமைந்தது. யானை தேர் குதிரை காலாள்
என்பன நான்கு படைகள். இவற்றில் ஒன்றாகிய குதிரையின் பெயர் கிள்ளை : அதுவே
கிளி்க்கும் பெயராயிருப்பது. அரன் திருமால் அயன் என்பன மூன்று தேவர்கள் பெயர்.
இவர்களில் ஒருவனாகிய திருமாலின் பெயர் அரி. அதுவே கிளிக்கும் பெயராயி்ற்று.
இருபயன் சுகம் துக்கம் என்பன. அவற்றில் ஒன்று சுகம் ; அதுவே கிளியின்
பெயராயுள்ளது. ஆதலால் ஏழில் ஒன்றே ! .......பயனில் ஒன்றே ! என விளித்தார்.