கிடந்த அகலிகைமேற் கால் பட்டபோது சாபம் நீங்கிப் பெண்ணாகி வந்தாள் என்ற வரலாற்றை யுட்கொண்டு "கல்லைப்பெண்ணாக்குமலர்க் காலினான்" என்றார். பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் என்பவர் ஒருவர். அவர் திருமால் அன்பிற் சிறந்தவராதலிற் சில அற்புதச் செயல்கள் அவர் பானிகழ்ந்தன. தெய்வப்பணிபுரிந்த ஒரு கிழவியைக் குமரியாக்கினார். அதனைக் கேள்வியுற்ற அந்நகர் மன்னன் ஆகிய பல்லவராயன், ஆழ்வார்க்கு மாணவராகிய கணிகண்ணன் என்பவரை யழைத்து, "என்னை இளமைப் பருவமுள்ளோன் ஆக்கும்படி நீர் நும் ஆசிரியரிடம் கூறல் வேண்டும்" என்று சொல்லக், கணிகண்ணன். "என்னால் அவ்வாறு ஆசிரியரிடம் கூற முடியாது" என்று மறுக்க, அதுகுறித்து நாடு கடக்கும் படி ஆணையிட்டனன். ஆணைப்படி கணிகண்ணன் நடக்கத் துணிந்து ஆசிரியரிடம் கூறி நீங்கினன். ஆசிரியர், திருமழிசையாழ்வார், காஞ்சிபுரம் கோயிலுக்குட்சென்று பெருமாளை நோக்கி "கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி, மணிவண்ணா நீயிங்கிராதே - துணிவுடனே, செந்நாப் புலவனிதோ செல்கின்றே னீயுமுன்றன், பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்" என்று பாடிச்சென்றார். அவர் சென்றவன்றே பாம்புப்படப் பாயலிற்கிடந்த பெருமாளுருவமும் மறைந்தது. மன்னன் கண்டு ஆழ்வாரிடம் சென்று வேண்டி, மீண்டும் பாடுவித்துப் பொருமாளுருவம் வரக்கண்டு மகிழ்ந்து வழிபட்டான் என்பது வரலாறு. இதனைக்கருதி "சொல்கவிக்கு.......பாயலான்" என்றார். தமிழ்க்கவிக்காகப் பாயற்பாரம் அடைந்த முதுகு உடையவன் என மாற்றுக. படப்பாயலைச் சுருட்டி முதுகில் போட்டுப் பின்னே நடந்துசென்றார் எனப் புலவர் கற்பித்தனர். குமர குருபரரும் தாம் பாடிய பிள்ளைத்தமிழில் "பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்பணைத்தோ ளெருத்தலைப்பப் பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே" என்று திருமாலைக் குறித்ததும் காண்க. பாரம் + முதுகு + அடைந்த என்றும். ஆர் + அமுது + கடைந்த என்றும் பிரித்துப் பொருள் காண்க. நாரி - பெண் ; இங்கு சீதை. மால் கண்ணனாகப் பிறந்து பூமிபாரத்தை நீக்கி வைகுந்தம் புறப்படவேண்டிய போது ஒரு நாள் காட்டில் ஒரு காலின்மேல் மற்றொரு காலை வைத்துப் படுத்திருந்தனர் என்றும், சரன் என்ற ஒரு வேடன் மான் என்று கருதிக் கால் நகங்களில் அம்பு படும்படி எய்து பின் வந்து பார்த்து வருந்தினன் என்றும், அறியாது செய்த பிழை பொறுத்து அவ்வேடனுக்கு வீட்டுலகம் கொடுத்தார் என்றும் பாகவதம் கூறும். ஆதலால், வேடன் எய்யும்படி கால் நகங்களைக் காட்டித் தந்து இவ்வுலகினின்றும் | | |
|
|