விடுதலை யடைந்தவன் எனக் கொள்க. தந்தவன் வீட்டையுந் தந்தவன் எனக் கூட்டியும் பொருள் கொள்க. வன் + கானகம் + கடந்த மென் + கால் + நகங்கள் + தந்த எனப் பிரிக்க. 74-77 : என் காதல் வெள்ளத்து.........காண்பிப்போன் (சொ-ள்.) எனது காதற்கடலில் அமிழ்ந்திக் கிடப்பவன்; கடலின்மேல் மிதந்து வருபவன் ; ஒவ்வொருவர் மனத்திலும் இருப்பவன்; இவ்வுலத்தி்ற்கு அப்பாலும் இருப்பவன் ; தெளிவாக வெட்டவெறு வெளியிடத்திலே நின்றாலும் ஒருவருக்கும் தோன்றாதவன்; அருகில் இருந்தாலும் அடைய முடியாதவன்; நீங்காமல் என் எண்ணத்திலே மாயன் என்ற பெயர்க்காரணம் தோன்றும்படி மறைந்திருப்பவன் ; கண்ணன் என்ற பெயர்க்காரணந் தோன்றும் படி என் கண்களிலிருந்து எப்பொருளையுங் காட்டவல்லவன். (வி - ம்.) என் காதற்கடலில் என்னால் அமிழ்த்தப்பட்டிருக்கிறான்; அக்கடலினின்றும் அவன் கரையேறவியலாது நான் அவனைப் பற்றியிருக்கிறேன் என்ற கருத்துத் தோன்ற "என் காதல் ....... அமிழ்ந்தினோன்" என்றாள். உப்பால் - அப்பால், உப்பாலான் என்றது உலகத்தையுங் கடந்து அப்பாலும் இருப்பவன் என்பதை யுணர்த்திற்று. மாயன் - மாயம் உடையவன். மாயம் - பொய். பெயருக் கேற்றவாறு மறைந்திருப்பவன் என்பது. கண்ணன் - கண்ணாகவிருப்பவன் ; எல்லாப் பொருள்களையும் விளக்கிக் காட்டவல்லான் என்பது. 77-80 : எண்ணுங்கால் எங்கும்...........இருத்துவோன் (சொ - ள்.) ஆராய்ந்து நோக்கும்போது எங்கும் இலன் என்று எவருங் கூறும்படி இருந்து எங்கும் நிறைந்து இருப்பவன் : எங்கும் நிறைந்து இருப்பவனாக அறிஞர்களுக்குத் தோன்றும்படி இருந்தே அறிவிலார்க்குத் தோன்றாமல் எங்குமில்லாதவனாய் மறைபவன், அங்கே அவனுக்குத் தோன்றும் என்னை எனக்குத் தெரியாமல் மறைத்து நான் எப்போதும் காணமுடியாத தன்னை எனக்குக் காட்டும் கடவுள், முற்பிறப்பில் நான் புரிந்த இருவினைகளையுங் கெடுத்து மலம் மாயைக் கூட்டங்களையும் நீக்கி என்னை எப்போதுந் தனியே இருக்கும்படி செய்ய எண்ணுவோன்.
|