(வி - ம்.) அறிவும் அன்பும் உடையவர் அகக்கண்னுக்கு எங்கும் நிறைந்திருக்கும் பொருளாகத் தோன்றுவதாலும் அவையில்லார் புறக்கண்களுக்குஎங்கும் இல்லையெனத் தெரிதலாலும் "எங்கும் நிறைந்திருப்போன்" என்றும், "எங்கும் இலாதான்" என்றும் கூறினர். 'யான்' என்னும் அகப்பற்றும், 'எனது' என்னும் புறப்பற்றும் நீங்காமல் இருக்கும்படி நீ செய்திருக்கின்றாய் என்ற கருத்தினால் "என்னை எனக்கொளித்து" என்றும், 'இங்ஙனம் பற்று நீங்காது தன்னையறியாத எனக்கு நீ தண்ணருளால் உன்னைக் காட்டினை' என்பது தோன்ற. "தன்னை யெனக்கு அருளும் தம்பிரான்" என்றும் கூறினர். இருவினையும் ஒழிந்து மும்மலமும் நீங்கியபோதுதான் உயிர் தனித்திருந்து இறைவனைக் காணும் இயல்பு பெறும். என்பது குறித்து, "முன்னை வினை.......இருத்துவோன்" என்றார். 80-82 : துன்று பிரமாவும்நான் ............பரஞ்சோதி (சொ-ள்.) என்னோடு நெருங்கியிருக்கும் பிரமனும் நானே ; அவன் படைத்த நிலைபெற்ற பல உயிர்களும் நானே ; பிரமன், உயிர் என்ற இருவரையும் ஏவிப் பணிசெய்விப் போனும் நானே என்று யாவர்க்கும் அறிவித்தற்பொருட்டு முற்காலத்தில் இடையர்களிடத்திலுள்ள பசுக்களாகவும், கன்றுகளாகவும், அவற்றை மேய்க்கும் இடையனாகவும் தோன்றிநின்ற முதன்மையான ஒளிப்பொருள். (வி - ம்.) திருமால் கண்ணனாகப் பிறந்து கோவலர் தலைவன் நந்தகோபன் மனையில் வளர்ந்து பசுக்கூட்டங்களை மேய்த்து வருங்காலத்தில் பிரமன் கண்ணனுக்குத் தோன்றாமல் சில பசுக்கன்றுகளையும் இடைச்சிறுவர்களையும் கவர்ந்து ஒளித்து வைத்தனன் என்பதும் அதனையறிந்த கண்ணன் தானே அப்பசுங்கன்றுகளாகவும், அவ்விடைச் சிறுவர்களாகவும் உருவங்கொண்டு இருந்தனன் என்பதும் பாகவதத்தில், மலரவன் சிறார் கன்று கவர்ந்த அத்தியாயத்தால் அறியலாம். இவ்வரலாறு கண்ணனே பிரமனாகவும், கன்றும் சிறாரும் ஆகவும் இருந்ததைக் காட்டுவது காண்க. 82-84 : மாநரகப் பேர் இருள்.........தொனிப்பிப்போன் (சொ - ள்.) கொடிய நரகமாகிய பெரிய இருட்டைத் தொலைப்பதற்கு நீங்கள் தவஞ்செய்ய வேண்டுவதில்லை ; உடம்பில் அருமையான உயிரைச் சேர்ப்பதற்குப் பிரமன் வேண்டுவதில்லை. | | |
|
|