பக்கம் எண் :

விளக்க உரை81


ஆராய்ந்து பாருங்கள் என்று மக்களுக்குக் காட்டுபவன் போலத் தன் கையில் உள்ள
சங்கின் முழக்கமும், பெரிய வேய்ங்குழலின் உயர்ந்த ஒலியும் தோன்றும்படி வாயில்
வைத்து ஊதிக்காட்டுவோன்.

   (வி - ம்.) நரகப் பேரிருள் நீக்குவது சங்கத்தொனி என்றும், உடம்பில் உயிரைக்
கூட்டுவது குழலோசை என்றும் முறையே கொள்க. பதினான்காம்நாட் போரில்
கண்ணன் வாய் வைத்தூதிய சங்கொலிகேட்ட யாவரும் வைகுந்தம் புகுந்தனர் எனப்
பாரதம் கூறுவதாலும், வேய்ங்குழலோசை கேட்ட பட்டமரங்கள் எல்லாம் உயிர்
பெற்றுத் தழைத்து நின்றன எனப் பாகவதம் கூறுவதாலும் இதன் உண்மையறிக.

84-87 : பொங்கும் அலை மோதும்பரன்..........உள்ளத்தான்


   (சொ-ள்.) பெருகும் திருப்பாற்கடலின் அலைமோதும் படி அறிதுயில் புரிவோன்;
இவனே ஆதிமூலம் என்று தோன்றும் படி "ஆதிமூலமே" என்றழைத்த யானையைச்
சான்றாகக் கொண்ட திருமால், பழைமையான உலகங்களை யெல்லாம் படைப்பவனும்
நான், அவற்றைத் துடைப்பவனும் நான் என்று சொல்லாமலே தனது சிறந்த உந்திக்
கமலத்தாலும் வாயினாலும் குறிப்பாகக் காட்டுவோன், இனிய தமிழ் மொழியால்
முதன்மையாகிய நான்கு வேதப்பொருளையும் நாலாயிரஞ் செய்யுளில் அமையும்படி
பாடிய ஆழ்வார் பதினொருவர் உள்ளத்திலும் அமர்ந்திருப்பவன்.

   (வி - ம்.) கசேந்திரன் என்ற யானை ஒரு மடுவில் முதலையாற் கவ்வப்பட்டு
வருந்தி "ஆதிமூலமே !" என்று அழைத்த போது தோன்றிச் சக்கரத்தால் 'முதலையைக்
கொன்று அவ்யானைக்கு வைகுந்தம் அளித்தார் என்பது பாகவத வரலாறு. அதனை
யுட்கொண்டு "ஓதுங்கரியொன் றுடைய மால்" என்றார். கரி-யானை ; கரி-சான்று,
இருபொருளும் தருமேனும் ஈண்டுச் சான்று என்ற பொருளே தகுதியுடைத்து. கரியாகிய
என வருவித்துக் கொள்க. உந்தியில் தாமரைப் பூ உண்டாகி அதிற் பிரமன் தோன்றி
அவன் உலகத்தைப் படைத்தான் என வைணவ சமயம் கூறுவதால் உந்தியின் செயல்
திருமாலே படைப்பவன் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது. யுகமுடிவு காலத்தில்
திருமால் உலகமுழுவதையும் வாயால் உண்டு வயிற்றில் அடக்கிக் கொள்வார் எனக்
கூறுவதால் வாயின்செயல், துடைப்பவனும் திருமால் என்பதைக் குறிப்பால்
உணர்த்தியது காண்க.