உவர்ப்பை மாற்றுவதற்காக மேகவடிவாக விளங்குவோன், உயர்வாக மடங்கி மடங்கி வருகின்ற பல்வேறு சமயங்களாகிய ஆறுகள் வந்தடங்குவதற்காகக் கருங்கடல் போன்ற வடிவு கொண்டவன்; தன்னுடம்பிற் சேர்க்கும் ஓர் ஒளியைப்போல என்னையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வதற்காக நீலமணி யுருவமும் ஆகியவன். (வி - ம்.) கடல்நீரை முகந்து உவரை நீக்கி நீராக்கிப் பொழிவது மேகத்தின் செயலாதலால் "சென்மக் கடலில் ....... முகிலானோன்" என்றார். பிறவியைக் கடலாகவும் அவிச்சையை உவராகவும் உருவகஞ்செய்தனர் எனக் காண்க. முகில்-முகில் வடிவம். உன்னையன்றித் தெய்வம் வேறில்லை ; எத்தெய்வத்தை நினைத்துத் துதித்தாலும் அத்துதியும் நின்னையே சாரும் ; நீயே பரம்பொருள் என்ற கருத்துக்கேற்ப "பரசமய நதிவந்தடங்க ......... ஆனோன்" என்றார். பரசமயம் என்பது வைணவத்தை விடுத்து மற்றைச் சமயங்களை யுணர்த்தும். கடற்குள் பல ஆறுகளும் வந்தடங்குவதுபோல உனக்குள் எல்லாச் சமயங்களும் அடங்கும் என்பது கருத்து. வாதம் - சொற்போர். சொற்போர்க்கு இடமாகிய பரசமய நதி என மாற்றுக. நீலநிறம், மஞ்சள் சிவப்பு முதலிய பல நிறங்களைத், தனக்குள் மறைத்துக் கொள்வதுபோல என்னை மறைப்பதற்காக நீ நீலமணி போன்ற வடிவு கொண்டாய் என்ற கருத்தினால் "எனையும்......ஆனோன்" என்றார். மணி - நீலம். கிரணம் ஒளி. 93-96 : பணைக்கும்விசைப்பூதலம்..........தணித்திடுவோன் (சொ - ள்,) பெரிய வேகத்தையுடைய பூமியாகிய ஊசலின்மேல் அமர்ந்து இருக்கின்றவனும் அவ்வூசலையாட்டுகின்றவனும் தானொருவனேயாகிய பெரியோன், விலங்குகளைப் பிடிக்கும் வேடர்கள் பார்வை மிருகங்களைப் பொருத்திவைத்து ஒரு பார்வை மிருகத்தைக்கொண்டு நூறு விலங்குகளைப் பிடிப்பது போலப் படைக்கப்பட்ட எனது பிறவி எண்பத்து நான்கு நூறாயிரத்தையும் தனது பிறவி பத்தினால் பிடித்துக் களைந்தோன். (வி - ம்.) பூவுலகம் எங்கும் நிறைந்து, இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கள் எல்லாம் கலந்து தான் வேறுஉலகம் வேறு என்று பிரிக்கமுடியாதபடி எள்ளில் எண்ணெய் பூவில் மணம்போல ஒன்றாயிருப்பவன் என்பது தோன்ற "ஊசல்மீதிலிருப்போனும் அசைப்போனும் தானாகும் அண்ணல்" என்றார். | | |
|
|