வேடர்கள் மான் முதலிய விலங்குகளைப் பிடிப்பதற்கு அவற்றைப்போல உருவஞ்செய்து வைத்திருப்பர். அது பார்வை மிருகம் எனப்படும். அன்றியும், வளர்த்துப் பழக்கியும் வைத்திருப்பர் மிருகங்களை, அவையும் பார்வை மிருகம் என்று கூறப்படும். அவற்றைக் கொண்டுபோய்க் கானகத்தில் விட்டுத் தாம் பிடிக்க நினைக்கும் மிருகத்தைப்போலக் கத்துவர். அவ்வொலி கேட்டுத் தம்மினமென்று பல வரும். அப்போது வேடர் மறைந்திருந்து அவற்றை வஞ்சகமாகப் பற்றிக்கொள்வர். இஃது வேடர் விலங்குகளைப் பிடிக்கும் விதம். இக்கருத்தினை யுட் கொண்டு, ஒரு பார்வை மிருகத்தை வைத்து நூற்றுக்கணக்கான விலங்குகளை வேடர்கள் வளைத்துப் பிடித்துக் கொள்வதுபோல நீ பத்துப்பிறவி எடுத்து எனது பிறப்பத்தனையுந் தொலைத்தாய், உன் பார்வையால் என் பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமும் இல்லாமல் நீங்கின என்றார். உயிர்களில் எண்பத்துநான்கு நூறாயிரம் வேறுபாடுகள் இருக்கின்றன என நூல்கள் கூறும். மரம் கொடி செடிகளாகிய தாவர வேறுபாடு இருபது நூறாயிரம் ; விலங்கு, பறவை, நீர் வாழ்வன பப்பத்து ; மக்கள் ஒன்பது ; தேவர்கள் பதினான்கு, ஊர்வன பதினொன்று என்று கணக்குக் கூறுகின்றனர். எறும்பு கடையானை தலையாக எண்பத்துநான்கு நூறாயிரம் என்று பழமொழி நெடுங்காலமாக வழங்குகிறது. "ஊர்வன பதினொன்றாகும் ஒன்பான் மானிடர்தம் பேதம், நீரினில் விலங்கு புள்ளுப் பப்பத்தாம் நெடிய தேவர், சாரும்ஈ ரேழ்நாலைந்தே தாவர யோனி பேதம். ஆருமெண் பானான் கோடேயமைந்த நூறாயிரங்கள்" என்பது சூடாமணி நிகண்டு. இதன் உண்மை அதில் காண்க. 96-100 : முன்பு புகழ்ந்து ஏத்து..........சோலைமலையினான் (சொ - ள்.) முன் நின்று புகழ் கூறித் துதிக்கும் பிரமன் அரன் என்னும் இருவரும் நீங்காமல் இருப்பக் கேசவாத்திரி என்னும் அழகு பெற்று, இனமாகிய விரும்பத்தக்க உடலைப் பெறுதற்குரிய பிறவியாகிய விலங்குகளைக் கெடுத்தலாற் சிங்காத்திரி என்ற சிறப்புப் பெற்று எம்பெருமானாகிய திருமால் கண்ணனாக வந்தபோது மேய்த்த பசுக் கூட்டங்கள் போலச் சிறுமலைகளெல்லாம் அருகில் சூழ்ந்து நிற்க, அப்பசுக்கூட்டத்தில் ஒரு பெரிய காளைபோல |