யாவரும் பார்க்கும்படி தோன்றுவதால் இனிய வாத்தியங்கள் முழங்கும் இடபகிரி என்ற பெயர் பொருந்திய சோலைமலையை யுடையவன். (வி - ம்.) கேசவன் - திருமால். அத்திரி - மலை. கேசவாத்திரி - திருமாலின் மலை ; கேசவன் இங்குத் தெய்வமாக இருப்பதால் அவன் வீற்றிருக்கு மலை கேசவாத்திரியாற்று. சிங்கம் + அத்திரி = சிங்காத்திரி, இஃது அம்மலையின் சிறப்புப்பெயர். ஒரு பிறவியால் பல பிறவிகளும் வருவதால் பிறவியைக் கால்விலங்கு என்பர் அறிஞர். சிங்காத்திரியைக் கண்டவர் பிறவித்தளை நீங்கப் பெறுவர் என்பது. கோத்திரம் ஆம் வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்தலால் - மலையில் உண்டாகிய கொடிய முன்கால் உள்ள வனமிருகங்களையெல்லாம் கொல்லுவதால் எனப் பொருள்கொண்டு அதனாற் சிங்கத்தின் செயலுடையது எனச் சிலேடை தோன்றுதல் காண்க. இடபம் - காளை. கிரி - மலை. இவ்வுவமையால் சுற்றுமுள்ள மலை சிறியவையென்றும், இம்மலை பெரியதென்றும் விளங்குகிறது. இடபகிரி என்ற பெயர்க் காரணம் இதுவன்று. தருமதேவதை முற்காலத்தில் இடபமாகி வந்து இம்மலையில் தவஞ்செய்து திருமாலை வழிபட்டுப் பேறு பெற்றமையே காரணம் ஆம். திருமாலுக்கு எப்போதும் பூசை நடத்துவதற்கு இசைக்கருவிகள் முழங்குவதால் "இன்னியம் ஆர்க்கும் இடபகிரி" என்றார். இலக்கிய மரபின்படி பாட்டுடைத் தலைவராகிய அழகர்க்குப் பத்துறுப்புக்கள் (தசாங்கம்) கூறத் தொடங்கி முதலில் மலை கூறினர் எனக் காண்க அரசாள்வதற்குத் தக்க துணையாகிய பத்துப் பொருள்களைத் தசாங்கம் எனக் கூறுவர் புலவர். தசம் - பத்து. அங்கம் - உறுப்பு. அரசு என்ற உடலுக்குரிய உறுப்புக்கள் இவைகள். அவை : மலை, ஆறு, நாடு, நகர், பரி, யானை, மாலை, முரசு, கொடி, ஆணை என்பன. இவையின்றி அரசு நடவாது ஆதலின் அங்கம் எனப் பெயர் பெற்றன. 101-103 : எந்நாளும் ............நூபுர நதியான் (சொ - ள்.) எஞ்ஞான்றும் பொன் மலையிலிருந்து வீழ்ந்து ஓடுகின்ற சாம்பூநதம் என்ற ஆறுபோலத் திருமால் திருவடியில் அணிந்த நல்ல மாணிக்கச் சிலம்பிலிருந்து வழிந்தோடுகின்ற நதியாகிக் கற்கள் நிறைந்த மலைகளில் இடபமலை இந்திரனைப்போலத் தோன்றவும். அதிலுள்ள வளம்பொருந்திய சுனைகள் அவ்விந்திரன் மெய்ம்மேல் |