உள்ள கண்களைப்போலத் தோன்றவும் பழைமையான திருமால் தோளினும் மார்பினும் அணிந்த முத்து மாலைபோலத் தோன்றி வருகின்ற சிலம்பாறுடையவன். (வி - ம்.) இமயமலையில் ஓடும் கங்கை பிரமபுத்திரா முதலிய ஆறுகளில் சாம்பூநதம் என்பதும் ஒன்று. சம்பு + நதம் = சாம்பூ நதம் என்றாயிற்று. இது வடமொழிப் புணர்ச்சி. சம்பு - நாவல் ; நதம் - மேற்கு நோக்கிச் செல்லும் யாறு. நதி - கிழக்கு நோக்கிச் செல்வது. இது வடமொழி மரபு. இதனால் நாவற் பழச்சாற்றின் மேல் நீர் வீழ்ந்து அருவியாக மேற்கு நோக்கியோடும் யாறு சாம்பூநதம் எனப் பெயர் பெற்றது. இடபமலையின் அடிவாரம் திருமாலின் திருவடியெனக் கொண்டு அங்குள்ள மாணிக்கமணிகளை அவரது திருவடிச் சிலம்பின் மாணிக்கமாகக் கொண்டு அவைகளின் வழியே யோடுகின்ற யாறாக அது தோன்றுகின்றது என்பது குறிப்பு, இடபமலை மேல் ஆயிரக்கணக்கான சுனைகள் இருக்கின்றன. அதனால் இந்திரன் உடம்பிலுள்ள விழிகளையொத்தன சுனைகள். இந்திரனைப் போன்றது இடபமலை. "மாயோன் மார்பின் ஆரம்போல, மணிவரை யிழிதரு மணிகிள ரருவி" (தொல். செய். 35. பேரா. உரை மேற்.) என்றார் முன்னைப் புலவோரும் ஆதலின் "மார்பின் முத்தாரம் போல வரும்" என்றார். நூபுரம் - சிலம்பு. நதி - ஆறு. சிலம்பாறு என்பது இடபகிரியில் ஒரு யாறு. "நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை" (சிலப். 11 : 108) "சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை" (பெரியதிரு. 9.9 : 9) இம்மேற்கோள்கள் சிலம்பாறு பழம்பெருமையுடையது என்பதை யுணர்த்தும். இதனால் யாறு கூறப்பட்டது. 103-106 : சீலமுறும் பன்னிரு செந்தமிழ் ...........நாட்டினான் (சொ - ள்.) நல்லொழுக்கமுள்ள செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டும் பூமகட்கு முறையே நினைக்கும் இருகைகள், இருசெவிகள், இரு கொங்கைகள், முகம், இரு கால்கள், கூந்தல் ஆகும். அவற்றுள் இமயமலைமேல் தமது புகழை எழுதப்பட்ட சோழனாடும் பாண்டிய நாடும் இரு கண்களாம் ; அவ்விரண்டில் கருணையுடைய வலக்கண் என்று சொல்லப்படுகின்ற தென்பாண்டி நாட்டினை யுடையவன். |