(வி - ம்.) செந்தமிழ் நாட்டைச்சேர்ந்த கொடுந்தமிழ் நாடுகளாவன: "தென்பாண்டி குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அதன் வடக்கு, நன்றாய சீதம், மலாடு, புனனாடு செந்தமிழ்சேர் ஏதமி்ல் பன்னிருநாட்டு எண்" என்ற செய்யுளிற் கூறப்படுவன. புனனாடு-சோழனாடு ; தென்பாண்டி பாண்டியனாடு. பின்னகம்-பின்னல். இது மயிர் முடியையுணர்த்திற்று. கனகம்-பொன். வரைமலை ; பொன் மலை. இஃது இமயமலையை யுணர்த்திற்று. கனகவரை மீது புகழ் தீட்டும் புனனாடும் தென்னாடும் என்றது சேரன், சோழன், பாண்டியனாகிய மூவேந்தரும் தமது வில், புலி, கயல் என்ற கொடிகளைத் தீட்டியதைக் குறிக்கும். "மின்றவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலி கயல்பொறித்த நாள்" என்பதும் "பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்" என்பதும் (சிலப்பதிகாரம், வாழ்த்துக். உரை, ஆய்ச்சியர் குரவை) காண்க. 106-111 : பொன்னுருவாய்ச் சந்த்ர ..............திருப்பதியான் (சொ - ள்.) தங்கமாகிய சந்திரன் வடிவத்தையுடைய சோமச்சந்திர விமானத்தை இந்திரவிமானமே இஃது என்றும் மந்திரத்தோடு கூடிய வெற்றிக்கொடி ஏறுகின்ற கொடிமரத்தைக் காமவல்லி படரும் கற்பகமரமே இது வென்றும், அறிவிற் சிறந்தவர்கட்கு ஒப்பற்ற வாழ்வாக வீற்றிருக்கும் திருமாலை உபேந்திரனே என்றும், உடையாழ்வாரை ஆண்ட குருவாகிய திருமாலையாண்டான் என்பவரை வியாழபகவான் என்றும், பொருந்திய புகழ்பெற்ற திருமலை நம்பி முதலிய கோயிற் பணியாளர்களைத் தேவர்களே என்றும் பெரியோர்கள் கருதும்படி அழகுநிறைந்த ஊர் ஆகிய அமராவதியைப்போன்ற திருமாலிருஞ்சோலை என்ற சிறந்த ஊரினையுடையவன். (வி - ம்.) சோமச்சந்திர விமானம் என்பது அழகர் எழுந்தருளி வரும் விமானத்தின் பெயர். சந்திரமண்டலம்போல அமைந்திருப்பதால் இதனைச் "சந்திரவடிவாம் விமானம்" என்றார். மந்திரம் மொழிந்து கொடியேற்றப்படுவதால் "மந்திர விருதுக்கொடி" என்றார். விருது - வெற்றி. துசம் - கொடி. தம்பம் - தூண் ; கொடியேற்றும் தூண். இதனைக் கொடிமரம் என்பர். வல்லிசாதம் - காமவல்லி ; இது கற்பகத்திற் படருங் |