கொடி. திருமாலையாண்டான் என்பது உடையவருடைய குரு. இவருடைய உருவச்சிலை ஆண்டாள் சந்நிதியின் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில், நம்பி என்றது திருமலை நம்பியை. இவர் கோயிற்பணியாளரின் முதன்மை பெற்றவர். இவர் வழிவழி வந்தவர், இன்னும் இக்கோயிலில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். உபேந்திரன் - திருமால். இந்திரனுக்குத் துணையாயிருந்து பொன்னுலகத்தைப் புரந்தனர் என்பது வரலாறு. 111, 112 : மார்பிடத்தில் என்னும்.........துளபமாலையான் (சொ - ள்.) மார்பின்கண் அணிந்துள்ள மதிக்கப்பெற்ற பல ஆபரணங்களின் நிறத்தொடு கலந்து வானவில்லைப் போலப் பச்சை நிறம் காட்டும் துழாய்மாலை யுடையவன். (வி - ம்.) இந்திர வில்லில், வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, பச்சை, நீலம், பொன்மை என்ற ஏழு நிறங்களும் கலந்திருப்பினும் பச்சை நிறமே மிகுதியும் தோன்றும். அதுபோலத் துளசிமாலையில் மற்றைப் பணிகளின் ஒளி கலந்தாலும் பசுமை நிறம் மிகுதியும் தோன்றுவதால் "வானவில்லைப்போல்" என்றார். 112-116 : உள்நின்று உருகும் ..............களியானையான் (சொ - ள்.) மனத்துள் நின்று மனதையுருகச் செய்யும் வைணவம் ஆகிய உயர்ந்த மதம் பெருகவும், திருமகள் அழகிய கொம்பும் துதிக்கையும் ஆகச் சேரவும், நெருக்கமான பகுதிகள் ஒத்திருக்கின்ற வைகானதம், பாஞ்சராத்திரம் என்ற ஆகமங்களின் (சமய நூல்களின்) ஒலியாகிய மணியோசை முழங்கவும், ஆசை நீங்கும் வரையும் விடாமற் கட்டுகின்ற வடகலை தென்கலை என்ற மணிகட்டிய கயிறுகளும் எப்போதும் நீங்காத ஆனந்தமயமாகிய தாமரைப் பூப்போன்ற திருமால் பாதங்களைக்கண்ட "அத்துவிதானந்தம்" என்ற பெயர் கொண்ட யானை யுடையவன். (வி - ம்.) அத்துவிதம் - இரண்டற்றது ; ஒரு பொருளையே கருதுவது. அதுவே இங்கு யானையாகக் கூறப்பட்டது. வைணவத்தை அதன் மதமாகவும், திருமகளைக் கொம்பு துதிக்கையாகவும், |