பக்கம் எண் :

90அழகர் கிள்ளைவிடு தூது


கொடி

119-121 : பாற்கடலிற் புக்க .............கருடப்பதாகையான்

   (சொ-ள்.) முற்காலத்தில் அமுதங்கடைவதற்காகத் திருப்பாற்கடலில் போய்ச்
சேர்ந்த ஒரு மந்தரமலையும், பூமியும், பம்பரமும், சக்கரமும் போலத் தலைசுழன்று
கூடிய வேகம் குறைந்தபோது வீழ அவ்வமையம் பார்த்து வாசுகியையும் சேடனையும்
வாயாற் கௌவிக்கொண்டுபோகும் திறல் வாய்ந்த கருடனாகிய கொடியையுடையவன்.

   (வி - ம்.) மந்தரம் சுழல்வதற்குப் பம்பரஞ் சுழல்வது உவமை. பூமி சுழல்வதற்குச்
சக்கரஞ் சுழல்வது உவமை. பம்பரம் நின்று தலைமட்டும் சுழல்வதாலும், சக்கரம்
கீழ்மேல் உருள்வதாலும் முறையே உவமைகள் ஆயின. மந்தரமலையிற் கயிறாகப்
பிணிக்கப்பட்ட பாம்பு வாசுகி. பூமியைத் தலையிற் சுமந்து நிற்கும் பாம்பு ஆதிசேடன்.
மந்தரமலை வேகங்குறைந்து விழுந்தால் வாசுகி என்னும் பாம்பைப் பற்றுவதற்கு ஏற்ற
அமையமாகும். பூமி வேகங்குறைந்து விழுந்தால் ஆதிசேடனைப் பற்றுவதற்கு ஏற்ற
அமையமாகும் என்று கருதியிருக்கும் கருடன் என அதன் ஆற்றலும் பெருமையும்
அழிவின்மையும் கூறினார். இறைவன் என்றும் அழிவில்லாதவன் ஆதலின் அவனது
கொடியாகிய கருடனும் அழிவில்லாதவன் என்பது கருத்து. 'கருடாழ்வார்' எனவும்
'பெரியதிருவடி' எனவும் வைணவ சமயம் கூறும்.

முரசம்

121, 122 : சுற்றியதன் குன்றில்..........மும்முரசினான்

   (சொ - ள்.) சூழ்ந்த திருமாலிருஞ்சோலையாகிய தனது மலையில் உள்ள
சிங்கத்தின் முழக்கமும், யானையின் ஒலியும், மேகத்தின் முழக்கமும் நின்று ஆரவாரஞ்
செய்வதால் கோயிலின் முற்றத்தில் எஞ்ஞான்றும் முழங்குகின்ற அந்த மூன்று
முரசங்களை யுடையவன்.

   (வி - ம்.) அழகர் கோயிலின் முன் பூசைக்காக முரசு முழங்குவதும் உண்டு
என்றாலும் இயற்கையாக எப்போதும் அம்மலையில் முழங்குவன இம்மூன்று
முழக்கங்களேயாதலின் அவற்றை அழகர்க்குரிய முரசங்களாகக் கற்பித்தார். அரி -
சிங்கம். கரி - யானை. கொண்மூ - மேகம். பிற விலங்கினங்களைக் கொன்று