பக்கம் எண் :

தமிழ்விடுதூது20


49.

முரசங் கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய்
 
50. ஓங்குபுகழ் மூவ ரொருபா வொருபஃதும்
ஆங்கவைசொல் லாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன்
 
51. கூற்றா யரனெழுதுங் கோவையுங் கோதிறாய்
மாற்றா விரட்டைமணி மாலையும் - தேற்றமுறப்
 
52. பற்றா மிலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து
கற்றார் வழங்குபஞ்ச காப்பியமுங் - கொற்றவருக்
 
53. கெண்ணிய வன்னனைக ளீரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நண்ணியே
 
54. இன்புறு சேரனரங் கேற்றமகிழ்ந் தம்பலத்தான்
அன்புறுபொன் வண்ணத்தந் தாதியும் - முன்பவர்சொல்
 
55. மாத்தமிழா மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள்
 
56. பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா
 
57. வெற்பனையார் மாதை விமலரிடத் தேயிருவர்
கற்பனையாற் சொன்ன கலம்பகமும் - முற்படையோ
 
58. டாடற் கலிங்கமழித் தாயிர மானைகொன்ற
பாடற் கரிய பரணியுங் - கூடல்
 
59. நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்
கொராயிரம்பொ னீந்த வுலாவும் - பராவுமவன்
 
60. பிள்ளைத் தமிழுமுன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப வுள்ளத்து
 
61. வீரியஞ் செய்து வினையொழிய வேராச
காரியஞ் செய்யுங் கவிதையே - பாரில்