பக்கம் எண் :

தமிழ்விடுதூது23


88.

மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளுனைப்போ லெய்தாவே - நன்னெறியின்
 
89. மண்ணிற் புகழுருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணிற்போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணியுனைக்
 
90. கொண்டுபுகழ் கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்டமிழே
 
91. ஈங்குனது சங்கத்தா லீச ருயர்ந்தாரோ
ஓங்குமவ ரானீ யுயர்ந்தாயோ - பூங்கமல
 
92. வீடாளும் வாணியங்கை மேலே யிருந்தாயோ
ஏடாக வுன்மே லிருந்தாளோ - ஆடரவத்
 
93. தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ
சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வே யென்
 
94. றோதிமுனி கேட்க வுனைமுருகர் சொன்னாரோ
சோதி யவரைநீ சொற்றனையோ - பேதியா
 
95. நேசருனக் கேபொருளாய் நின்றாரோ நீண்மதுரை
வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ - பாசமுறும்
 
96. என்செய்தி நீகண் டிரங்குவது நீதியல்லால்
உன்செய்தி நானோ வுரைசெய்வேன் - இன்சொல்லாய்
 
97. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தகவென்ற - சொற்குள்ளே
 
98. எல்லார்க்கும் புத்தி யியம்பிக் கரையேற்ற
வல்லா யுனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன்
 
99. ஈரடிக்குள் ளேயுலக மெல்லா மடங்குமெனின்
நேரடிக்கு வேறே நிலனுண்டோ - ஓரடிக்கோர்
 
100. ஆயிரம் பொன்னிறைக்கு மையரை வீதியிலே
போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ - யாயிருந்தும்