பக்கம் எண் :

தமிழ்விடுதூது27


140.

நின்றவூர்ப் பூசலார் நீரடிவெ லாநினைந்து
குன்றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும்
 
141. தாயான கங்கைமுடி தாள்குளிரக் கண்ணப்பர்
வாயா லுமிழ்ந்ததிரு மஞ்சனமுந் - தூயமழைத்
 
142. துன்பார் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்
வன்பா யளித்தபரி வட்டமும் - இன்பாத்
 
143. தணிவரிய மானக்கஞ் சாறனார் சாத்தும்
மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார்
 
144. காமன்பான் முன்சேந்த கண்போல மூர்த்தியார்
தாமன்பான் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போற்
 
145. காக்குமரி புனைந்த கண்மலருங் காதலொடு
சாக்கியர்தாஞ் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா
 
146. ஆக்கிய மாற னமுதுஞ் சிறுத்தொண்டர்
மாக்கறியுந் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய
 
147. காரா ரிரவிற் கணம்புல்லர் தம்முடிமேற்
சீராக வேற்றியசெந் தீபமும் - ஆரால்
 
148. அமைத்து வணங்கலுறு மங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர்
 
149. அற்சனைபாட் டேயாமென் றாரூரர்க் காதியிலே
சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே
 
150. செய்தாய்நால் வேதந் திகைத்தொதுங்கப் பித்தனென்று
வைதாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்
 
151. இருந்தமிழே யுன்னா லிருந்தே னிமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன் - வருந்தினன்மால்
 
152. வெல்லானை தின்ற விளங்கனியா னேன்விரகக்
கல்லானை தின்ற கரும்பானேன் - நல்லவரைத்