பக்கம் எண் :

தமிழ்விடுதூது29


166. அங்கத்தைப் பூம்பாவை யாக்கினா யாதலினென்
அங்கத்தைப் பூம்பாவை யாக்காயோ - மங்கத்தான்
 
167. மாய்ந்தாலு மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை
 
168. செய்தாளென் றென்சொல் செவியோர்ந்து செல்வாயிங்
கெய்தாம லங்கிருக்க வெண்ணாதே - பொய்தீரத்
 
169. தேசிவருஞ் சொக்கருக்கே சென்றிருந் தாங்கவரைப்
பேசிவருந் தூது பிறிதுண்டோ - நேசமொடு
 
170. தைவரினுங் காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்
கைவிரலாற் காட்டியருள் காளையும் - தெய்வவெள்ளிப்
 
171. பூதர வானவரைப் போற்றமுயன் றையாற்றில்
ஆதரவாய்க் கண்ட வரசரும் - நாதர்
 
172. அளந்தருள்செம் பொன்னைமணி யாற்றிலிட் டாரூர்க்
குளந்தனிலே தேடியருள் கோவும் - வளந்திகழும்
 
173. காளத்தி யில்வந்த காட்சிகயி லாயத்து
நீளத்தான் சொற்றவனு நீயன்றோ - கேளப்பால்
 
174. அம்மைதமக் கில்லாதா ரம்மைதா மாவிருந்தார்
அம்மையென்று முன்னுரைத்த வம்மையாய்த் - தம்மெதிரே
 
175. வெள்ளானை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ளானை மேற்கொண்ட வித்தகராய்த் - தள்ளாது
 
176. விஞ்சுவரால் வண்ணானை வெண்ணீற்ற ரென்றுபணிந்
தஞ்சலிசெய் தாட்செய்த வன்பராய்ச் - சஞ்சரியாத்
 
177. தென்கையி லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே
உன்கையி லாகாத தொன்றுண்டோ - என்கையால்
 
178. ஆய மவள்பாகத் தன்பரு முக்கிரராம்
சேயும் புரந்திருக்குந் தென்மதுரை - வாயினிய