பக்கம் எண் :

தமிழ்விடுதூது33


218. செருக்குஞ் சினேகமுற்ற தேவி யுடனே
இருக்குஞ் சினகரத்து ளெய்திப் - பொருக்கெனப்போய்
 
219. எந்தாயென் றேத்து மிடைக்காடன் பின்போன
செந்தா மரைபோற் றிருத்தாளும் - வந்துமனந்
 
220. தேறிக் கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு
மாறித் திரும்பு மணிக்குறங்குஞ் - சீறிப்
 
221. பணிக்கற்கு மாறாப் படையுடைவாள் சேர்த்து
மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத்
 
222. தொண்டுபடு வந்தி சொரிந்திடும்பிட் டள்ளிபள்ளி
உண்டுபசி தீர்ந்த வுதரமும் - அண்டுமொரு
 
223. தாய்முலைப்பா லுண்டறியாத் தாம்பன்றிக் குட்டிகளின்
வாய்முலைப்பா லூட்டியபூண் மார்பமுந் - தூயமுடி
 
224. ஆணிக் கனகத் தழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப்
 
225. பூம்படலை யாத்திப் புனைமலரைப் பூணாமல்
வேம்பலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி
 
226. வாதிற் கரிக்குருவி வாழ்தற் குபதேசம்
காதிற் புகன்ற கனிவாயும் - தீதில்சொல்
 
227. வாயிலா நீயிருந்து வாழும் படியுனக்குக்
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப்
 
228. பெண்ணீராள் கண்ணீர் பெருகத் தழுவித்தம்
கண்ணீரா லாற்றியருள் கண்களும் - தெண்ணீரார்
 
229. பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து
 
230. கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித்
தொண்டுசெய்து தாண்முடிமேற் சூடியே - மண்டும்