பக்கம் எண் :

விளக்கவுரை37


திருச்சிற்றம்பலம்
விளக்கவுரை

     1 - 8: சீர்கொண்ட................... பகர்ந்தோரும்

     (பொழிப்புரை) சிறப்புப் பொருந்திய கூடலென்ற சிவராசதானியைக்
காத்து அழகு பொருந்திய சங்கத்திற் புலவராயிருந்தவரும், பல திசைகளிலுஞ்
சென்று போர்புரிந்து வாய்ந்த தமிழரசி யென்று பலரும் வாழ்த்தித் துதிப்பத்
திசைதோறும் தன் வெற்றியைத் தோற்றுவித்த பெண்ணரசியும்,
விருப்பமுறும்படி திருத்தமான சிவஞானத் தொகுதியுடைய ஏட்டுச் சுவடிகளில்
ஓர் ஏட்டினைக் கையிலெடுத்தெறிந்த கணபதியும், உண்மையருளால்
மதுரையை அரசு புரிந்து ஒருகாலத்தில் மதுரைச் சங்கப் புலவரெதிரமர்ந்து
பாடலின் சிறப்பையுணர்த்திய வேற்படையுடைய முருகக்கடவுளும், மனையை
விட்டு நீங்காத இளமைவாய்ந்த மூன்றாண்டுப் பருவத்தின் வடமொழி
நூல்களும் தென்மொழி நூல்களும் தாயாகிய உமையம்மையா ரூட்டிய
ஞானத்தோடு கலந்த முலைப்பாலானறிந்தவரும், மூன்றாண்டுக்கு முன்னர்
முதலையுண்ட பிள்ளையை மூன்று விழியார்முன் கவிபாடிப் பின்பெற்றுத்
தரும்படி தமிழாலுரைத்தவரும், பிரமனும் திருமாலுந் தோன்றும்படி தேடியும்
அறியமுடியாத சிவபெருமான் திருவடியைத் திரு நல்லூரிற் செய்யுள்பாடித்
தம் முடியாகப் பெற்றுக் கொண்டவரும், ஆய்ந்து தம் முடியில் மணமுள்ள
தாழம்பூவைச் சூடாதவராகிய சிவபெருமான் ஓலையை வாரிச் சேர்த்துத் தம்
பட்டோலையில் எழுதிக் கொள்ளுமாறு செய்யுள் பகர்ந்தவரும்.