(விளக்கம்)
கூடல் - மதுரை. சிவராசதானி மதுரை சிவபெருமான்
சுந்தரராக வந்து அரசு புரிந்த இடம் ஆதலின், சங்கத்திருந்தோர் என்றது
சிவபெருமானை. நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களுள் ஒருவராக
(இறையனார் என்ற பெயருடையவராக) இருந்தனரென்பது வரலாறு.
போர்கொண்டு என்பது திசைதோறுஞ் சென்று பல மன்னர்களுடன் போர்
புரிந்ததை யுணர்த்தியது. மின்: உவமையாகு பெயராய்த் தடாதகைப்
பிராட்டியாரை யுணர்த்தியது; தமிழரசி என்று ஏத்தெடுப்பத் திக்கு விசையஞ்
செலுத்தியவர் அவரேயாதலின், நசை - விருப்பம். முன்னொருகாலத்திற்
சிவபெருமான் உமையாளுக்குச் சிவாகமப் பொருள் கூறினர் என்பதும்,
அதனைப் பாராமுகமாகக் கேட்டதையுணர்ந்து வலைஞர் மகளாகப் பிறத்தி நீ
என உமையைச் சபித்தனர் என்பதும், தந்தை சபித்ததை யுணர்ந்து தந்திமுகக்
கணபதி ஆகமச் சுவடிகளைத் துதிக்கையாலெடுத்துக் கடலில் வீசியெறிந்தனர்
என்பதும் வரலாறு. அதனாற் கையிலெடுத்த கணபதியும் என்றார். அதன்
விரிவு திருவால. திருவிளை. வலைவீசின படலம் காண்க. பாடலறிவித்த
படைவேள் என்பது முருகக்கடவுளை. முருகக்கடவுள் முன் தாடதகையின்
புதல்வன் உக்கிரகுமாரபாண்டியனாக வந்து மதுரையை யாண்டு பின்னர்
உப்பூர் கிழார் மகன் ஊமை உருத்திரசன்மனாக வந்து இறையனாரகப்
பொருளுரைகளுள் நல்லுரை யுணர்த்தினன் என்பது வரலாறு. திருவால.
ஊமை தமிழறிந்த, உக்கிரன் பிறந்த திருவிளையாடல் காண்க. மூன்றாண்டுப்
பருவத்தின் அன்னை முலைப்பாலினறிந்தோர் திருஞான சம்பந்தர்; முத்தமிழ்
நான்மறை ஞானசம்பந்தன் என்ற தேவாரப்பாவால் வடகலையும்
தென்கலையும் அறிந்தனர் என்பதும், ஞான முணர்ந்தனர் என்பதும்
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை யறமாற்றும்
பாங்கினிலோங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞான முணர்வரிய
மெய்ஞ்ஞானம், தவ முதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தாரந் நிலையில் என்ற
சேக்கிழார் திருவாய் மொழியான் உணர்க.
|
|
|
|