பிறவாமல் இறவாமல்
உயிர்க்குயிராக நின்றாய். வந்த குலங்கள் ஐந்தாகவும்
தோன்றி வளர்ந்தாய்.
(வி - ம்.)
பஞ்சி - பஞ்சு. பன்னிய - சொல்லிய எனலுமாம். நெருடுதல்
- தடவுதல். நூல் அறுந்தபோது நாவில் நக்கிக் கையால் உருட்டிப்
பொருத்திப் பரப்புவது பா. கலை - ஆடை, உடை. கிழிதலும் குறைதலும்
அழுக்குப் படிதலும் கலைக்குப் பொருந்திய இயல்பு. நூல்களுக்குப் பலவகை
நிறம் தோய்ப்பது இயற்கை. செய்யுள் - பாட்டு; விளைநிலம். பிறந்தும் இறந்தும்
வருகின்ற மக்கள் குலத்திற் பிறவாதும் இறவாதும் உயிர்க்குள்ளுயிராய்ப்
பிறந்து வருகின்றாய். குலம் பிறப்பில் இல்லையெனினும் பின் ஐந்து
குலமாகவும் வந்து வளர்ந்தாய். ஐந்து குலம் என்றது, ஐந்து பாக்களை:
வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்பன அவற்றின் பெயர்.
தமிழே! நீ நூல் எனவும் பா எனவும், கலை எனவும், செய்யுள் எனவும், பெயர்
பெற்றாய்; ஆயினும் அவற்றின் பண்பு நினக்கில்லை; நீ தனிப் பண்புடையாய்
என்க. சொல்லேருழவர் - புலவர். சொல்லினை ஏராகக் கொண்டுழுது
பொருட்பயனை மக்கள் மனத்தில் விளைப்பவர் என்ற காரணம் தோன்றிற்று.
சொல்லேருழவர் பகை (திருக்குறள் 872) இந்நூலிற் சொல்லேருழவர் எனப்
(கண்ணி 64) பின்னும் வருவது காண்க. சொல் நெல் எனவும் பொருள்படும்;
ஆதலின் உழவரகம் தீயாது நெல்விளைகின்ற வயலே என மற்றுமொரு
பொருள் வழங்குவது காண்க.
19 - 22 : இருநிலத்து.................பிறந்தாய்
(பொ - ரை.)
பெருமை தங்கிய புவியிற் புண்ணியம் வாய்ந்த
உந்தியிடத்தில் காற்றுத் தங்கிப் பின் வாக்கு ஆகிய சூற் கொண்டிருந்து
தலையும் கழுத்தும் மூக்கும் மார்பும் ஆய நான்கிடத்தினும் சார்ந்து உதடும்
நாக்கும் பல்லும் கெடாத மேல் வாயும் ஆய கருவிகளால் வடிவமாகித்
தலையினின்று மீண்டு ஏற்குமாறு முதலெழுத்து முப்பதாகவும் சார்பெழுத்து
இருநூற்று நாற்பதாகவும் நன்றாகப் பிறந்தாய்.
|
|
|
|