கொலுவில் வீற்றிருக்கப்பெற்றாய்.
உலகத்தோர் புகழும்படி தாழ்வில்லாத பதினெட்டு வகைச் சிறப்புக்களாகிய வாழ்வெல்லாம்
நோக்கி மகிழ்ந்தாய்.
(வி - ம்.)
மக்கள் பிறந்து வளர்ந்து அணி முதலியவை புனைந்து
மணமகனாகிப் பெண்களை மணந்து காமக் கிழத்தியரையும் மணந்து
மக்கட்பேறு பெற்றுப் பின் உலக வாழ்வில் இன்பங்கண்டு மகிழ்ந்திருப்பது
போலத் தமிழும் பிறந்து வளர்ந்து பின்னர் வாழ்வு கண்டு மகிழ்ந்ததாக
உருவகப்படுத்துகின்றார் ஆசிரியர். முன்னர் வளர்ச்சி கூறி முடித்தார்.
மாப்பிள்ளையாய்ப் பெண்களை மணந்து மகப்பேறு பெற்று வாழ்வுபெற்ற
முறை ஈண்டுக் கூறுகின்றார். தமிழ் மொழியை மாப்பிள்ளையாக
உருவகப்படுத்தி அதற்கு அணிகலன்களாக்கினார்; செய்யுட்சொல் நான்கு,
செந்தமிழ்ச் சொல் நான்கு, பொருளில் உள்ள எழுவகைத் திணைகள், எழுத்து
முதலிய யாப்புறுப்புக்கள் எட்டு, அலங்காரம் முப்பத்தைந்து ஆகிய இவற்றை.
பேதியா - பேதித்து; வேறுபட்டு. பல்வகையணிகலம் புனைந்ததனால்
வேறுபட்டுப் பேரழகுடைய மாப்பிள்ளையானது தமிழ் என்பது விளங்கிற்று.
செய்யுட் சொல் நான்காவன:- இயற்சொல் திரிசொல் திசைச்சொல்,
வடசொலென், றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே என்பதனாலறிக.
செந்தமிழ்ச் சொல் நான்காவன: பெயர், வினை, இடை, உரி என வகுத்த
சொற்கள். மெய்யுட்பொருள் என்றதை தமிழ்மொழியின் உடலுள் அமைந்த
பொருள் எனக் கொள்க. உண்மையாகிய அதனுள்ளிருக்கும் பொருள் எனக்
கொளலுமாம். அகம் புறம் என்ற பொருளியலில் வகுத்த எழுவகைத்
திணைகள். அகத்திற்குரியவை கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் பெருந்திணையென்பன, புறத்திற்குரியவை வெட்சி, காஞ்சி, வஞ்சி,
உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்பன. எழுத்து, அசை, சீர், தளை, அடி,
தொடை, ஓசை, இனம் என்பன யாப்புறுப்புக்கள். அலங்காரம்
முப்பத்தைந்தாவன தன்மை யணிமுதற் பாவிக மிறுதியாகத் தண்டியலங்கார
நூலிற் கூறப்படுவனவாம். செப்பலோசை வெண்பாவிற்குரியது.
|
|
|
|