பக்கம் எண் :

விளக்கவுரை49


மேல்கடலும் கீழ்கடலும் முதன்மையான தென்குமரியாறும் வடவேங்கட
மலையும் எல்லையாக வகுத்தாய். இவற்றின் நடுவேயிருந்த தென்பாண்டி
முதல் புன்னாடு முடிவான பன்னிரண்டு நாடுகளும் அத்தமிழ் நாட்டின்
பகுதிப்பட்ட நாடுகளோ! அந்நாடுகளுள் வையை, கருவை, மருதாறு, மருவூர்
இவற்றின் நடுவே அரசே நீ வாழும் அரண்மனையுளதோ! மூவேந்தரை
ஊர்தியாகக் கொண்டு மூன்றுலகமும் போய்ச் சுற்றிவந்த பாவேந்தனே! நீ
பெரிய பார்வேந்தனோ! (நானறியேன்)

     (வி - ம்.) கோலம் நீர்க்கரையுமாம். செந்தமிழின் பொருட்டு
மணிவாசகப் பெருமான் பாடல் கேட்டிரங்கிச் சிவபெருமான் மண் சுமக்க
வந்தமையாற் பிரம்படியைத் தமிழ் ஏற்றுக்கொண்டதாகக் கூறினர். தமிழ்ப்
பற்றுடையார் சிவபெருமான் ஆதலின் மணிவாசகருக்காகப் பிரம்படிபட்டார்
என்பது கருத்து. மேல் கீழ் என்ற இடங்களை எட்டுத்திசையுடன் கூட்டப்
பத்தாம். செங்கோல் என்பது ஆட்சியைக் குறித்தது. மொழியாட்சி தமிழ்
மொழிபேசாத திசையொன்று மின்று என்பது கருத்து. ஒரு காலத்தில் இந்நாடு
ஐம்பத்தாறு தேசங்களாகப் பகுக்கப்பட்டிருந்தன வென்பதும் அவற்றுள்
தமிழ்மொழி வழங்கும் நாட்டினைச் சார்ந்தன பதினேழு எனவும்
தோன்றுகின்றது. “சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனம் துளுக்குடகங்,
கொங்கணம் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம், கங்க
மகதங்கவுடங் கடாரங் கடுங்குசலந், தங்கும் புகழ்சேர் தமிழ்சூழ் பெரும்
புவிதா மிவையே” என்பதனாலறிக. பதினேழு நாட்டு மொழிகளும் உனக்குச்
சிற்றரசரோ என்றார், நெருங்கிய தொடர்புடைய மொழிகளெனக் கருதி.
மன்னியர் - மன்னர், அரசர். கோக்குமரி என்றது தலைமையான
குமரியாற்றினை. “வட வேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு
நல்லுலகம்” எனத் தொல்காப்பியத்திற் பாயிரம் வகுத்தபடியிது. குடக்கு -
மேற்கு. குடக்குக் கடல் குடகடல் என்று புணர்ந்து நின்றது. வடவரை -
வடக்கின்கண் உள்ள மலை. இது குறிப்பால் வேங்கடத்தையுணர்த்திற்று.
முன்னுறும் - நினைக்கின்ற; கருதுகின்ற.