பக்கம் எண் :

விளக்கவுரை50


“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவாவதன் வடக்கு -
நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சே ரேதமில் பன்னிருநாட் டெண்”
எனக் கூறியவற்றைத் தென்பாண்டி முதற் புனனாடீறான பன்னிரண்டு எனப்
பகர்ந்தார். அப்பால் + நாடோ. அப்பகுதியினுட்பட்ட நாடோ. ஐய - அரசனே
இது விளி. வையை யாற்றின் வடக்கும் கருவூரின் கிழக்கும் மருதயாற்றின்
தெற்கும் மருவூரின் மேற்கும் ஆகிய எல்லையையுடைய நடுவிடத்தை
“டுவே” என்றார். இஃது செந்தமிழ் நாட்டெல்லையென்பது. கருவை -
கருவூர். இவ்வெல்லை” அவற்றுள், இயற்சொற்றாமே” என்ற தொல்காப்பியச்
சூத்திரத்திற்கு இளம்பூரணர் முதலிய உரையாசிரியர் கூறியபடியாம். மூவேந்தர்:
சேரன், சோழன், பாண்டியன் என்ற தமிழ் நாட்டரசர். வாகனம் - ஊர்தி.
அம்மன்னர் வாயிலாகத் தமிழ்மொழி எங்கணும் சுற்றிவந்தது என்பது கருத்து.
இமயமுதற் குமரிவரை ஒருமொழி வைத்துலகாண்ட சேரலாதன் எனவும்,
திருக்கைலாயஞ் சென்று ஞானவுலா அரங்கேற்றினர் சேரமான்
பெருமாணாயனார் எனவும் வரலாறு தோன்றுதலால் “மூவுலகும் போய்
வளைந்த பாவேந்தே” என்றார். பெரிய பார் வேந்தோ என்பதிலுள்ள ஓகாரம்
வியப்புப்பொருளைக் காட்டிற்று. மன்னியரோ, பானாடோ, அரண்மனையோ
என்பவற்றிலுள்ள ஓவும் அன்ன. நீ பேரரசனாக இருப்பதனால் உனக்குக் கீழ்ச்
சிற்றரசரும் பன்னிரண்டு நாடுகளும் உள, அரண்மனையும் நடுவேயுளது, நின்
செங்கோல் செல்லாத திசையும் இல்லை எனப் பொருள் கொள்க. மூவேந்தர்
மண், விண் பாதலம் என்ற மூன்றுலகங்களினும் சென்றபோது தமிழும்
அவர்களுடன் சென்றது என்க. சோழன் கிள்ளி பாதலத்திற் சென்று நாக
கன்னியை மணந்ததும், முசுகுந்தன் விண்ணுலகு சென்று அசுரர்களை வென்று
தேவர்களைக் காத்ததும், நிலந்தருதிருவிற் பாண்டியன் மேலுலகு சென்று
தேவர் அசுரர் பகையைத் தீர்த்ததும், சேரர்களிற் சிலர் வானளவும் சென்று
வென்று வானவரம்பன் என்ற பெயர் பெற்றதும் இவைபோன்ற வரலாறுகள்
தமிழ் நாட்டரசர் மூவுலகுஞ் சென்றனர் என்பதைப் புலப்படுத்துகின்றன.
பத்துத் திசையும் தமிழரசன் செங்கோல் சென்றது வரலாறுகளால் உணர்க.