41
- 49 : காவேந்து......................வாழ்ந்தே
(பொ - ரை.)
கற்பகத்தருவை யேந்திய விண்ணுலகத் தேவர்களுங்
காண்பதற்கு அருமையான நான்கு வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் உனக்குப்
புரோகிதர் போலும், புண்ணியனே! அளவற்ற நல்ல பெருங்காப்பியங்களும்
நாடகங்களும் அலங்காரங்களும் ஆகிய நூல்களெல்லாம் உன்னுடைய
நண்பர்கள் போலும், மொழிகட் கரசனே! பழமையான இவ்வுலகத்திற்
சார்ந்தவர்களைக் காக்கும் வேந்தனே! சாத்திரங்களெல்லாம் உன் பூமியைப்
புரக்கும் படைத்தலைவர்கள் போலும். வீரர்கள் நடுங்கத்தக்க போர் வரலாறு
கொண்ட பாரதம் என்ற நூலும் பதினெண் புராணங்களும் உன்னுடைய
படைகளேயாம். சிறப்புடைய பாடலே! உன்னைப் பார்ப்பவர்கள் எல்லாம்
அக்கரவர்த்தியென்று சொல்லலாமென்பார்; இப்பூவுலகிற் சக்கரவர்த்தியும்
நீதானன்றோ? சக்கர முன்னர் ஏந்தி நெடுந்தேர் மேலேறிச் சுழிகுளம் இறங்கி
நீந்தி, ஒரு கூடம் நிறைந்த சதுக்கத்தில் வந்தமர்ந்து, இனிமை பரவும்
மாலைமாற்றினையணிந்து, சூழுஞ் சதுரங்க சேனைகளும் விளங்க நன்மையாகி
முரசமுழங்க முடிவேந்தர் சூழ உயர்வான சங்கப் பலகை மேலிருந்து வாழ்ந்து.
(வி - ம்.)
கா - கற்பகம், ஏந்திய விண் என அடையாக்குக. இருக்கு,
எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்கள். ஆகமங்கள் காமிக
முதல் வாதுளம் இறுதியாகவுள்ள இருபத்தெட்டு. இவற்றைத் தமிழ்ப்
பேரரசனுக்குப் புரோகிதர் ஆக்கினர். காப்பியம் நாடகம் அலங்காரம்
இவற்றை நண்பராக்கினர். சாத்திரங்களைப் படைத் தலைவராக்கினர்.
பாரதமும் புராணங்களும் படைகள் ஆம் என்றனர், தமிழ் மொழிக்கு
இவைகள் துணையாகி யடுத்து நிற்றலால். அக்கரவர்த்தி - எழுத்துக்களின்
வழிவருவோன். அக்கரவர்த்தி - அக்கரவர்த்தனம் என்ற
சொல்லணிக்கவியினிற்பவன். அக்கரம் - எழுத்து. எழுத்து வருத்தனம்
என்பது சித்திரகவியிலொன்று. சக்கரவர்த்தி - சக்கரத்திலமைக்கும் பாடலாகிய
சித்திரகவியினிற்பவன்.
|
|
|
|