பக்கம் எண் :

முன்னுரை8


பிறக்குமுறைபோல வளிதரித்து, கருப்பமாய், வண்ணத்துருவாய், நனிபிறந்தாய்
என வகுத்திருப்பது தமிழ் இலக்கண நுட்பத்தை எடுத்துரைத்ததாம் (20 - 22).
ஈராறெனும் பருவஞ் செய்து, தொட்டிற் கிடத்தித் தாலாட்டி,
மஞ்சட்குளிப்பாட்டி, மையிட்டு, முப்பாலும் புகட்ட வளர்ந்தாய் என்று தமிழ்
மொழியைப் பண்டைக்காலம் ஏட்டில் வரைவதையும் கணக்காயர் சிறார்க்குக்
கற்பித்துக் கல்வி வளர்ப்பதையும் கண்டு பிள்ளைகள் வளர்க்குமுறைபோலத்
தோன்றுமாறமைத்த சொல்லாற்றல் பெரிதும் வியக்கற்பாலதே (23 - 25).
வளர்ந்து பின்னர் மாப்பிள்ளையாய்ப் பண்கள் ஆகிய பட்டத்துத்
தோகையரை மணந்து கல்யாணப் பாவையராகக் கொண்டு நவரசமாம்
பிள்ளைகளைப் பெற்றுப் பெருவாழ்வு பெற்றாயே! கொலுவில் வீற்றிருக்கப்
பெற்றாயே! வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே! என்று மக்கள் வாழ்வுபோலத்
தமிழ் வாழ்வினையும் உருவகப்படுத்திக் காட்டிய அருமை காண்க (29 - 34).

தமிழினைச் சக்கரவர்த்தியென்பது

     இனி, தமிழ்மொழியைச் சக்கரவர்த்தியென உருவகமாக்கி (46), பத்துத்
திசையிலும் நின்செங்கோல் செல்லாத திசையில்லை; ஐம்பத்தாறு தேயத்துள்
சிங்களம் சோனகம் முதலிய பதினேழ் நிலத்து மொழிகளும் சிற்றரசர்;
குடகடல், கீழ்கடல், குமரியாறு, வடவரை நினக்குரிய எல்லைகள்;
இடையேயுள்ள தென்பாண்டி குட்ட முதலிய பன்னிரு நாடுகளும்
நின்பாற்பட்டன; அந்நாட்டுள் வையை, கருவை, மருதாறு, மருவூர் ஆகிய
இவற்றின் நடுவே நினக்கு அரண்மனையுள்ளது; நீ பெரிய பார்வேந்து;
வடமொழி வேதாகமங்கள் எல்லாம் நின் புரோகிதர்கள்;
பெருங்காப்பியங்களும் நாடகமும் அலங்காரமும் நின் தோழர்கள்;
சாத்திரங்களெல்லாந் தானாபதிகள்; பாரதமும் பதினெண்