|
|
அஃதாவது, பாங்கி கூட்டுவிக்கத் தலைவன் கூடும் கூட்டம். |
| 1`இரந்துபின் நிற்றல் சேட்படை மடற்கூற்று மடல்விலக் குடன்படல் மடற்கூற் றொழிதல் குறைநயப் பித்தல் நயத்தல் கூட்டல் கூடல் ஆயங் கூட்டல் வேட்டலென் றீராறு வகைத்தே இகுளையிற் கூட்டம்`
|
என்னுஞ் சூத்திரவிதியால், பாங்கியிற்கூட்டம் பன்னிரண்டு வகைப்படும். |
தலைவனுட்கோள் சாற்றல்: |
தலைவன் உட்கோள் சாற்றல் என்பது, தலைவன் தன் உள்ளத்தின்கண் கொண்ட காதலைக் கூறுதல்.
|
| வாவுங் கலைவிந்தை காவலன் வாணன்தென் மாறையன்னீர் ஏவுந் தொழிலெனக் கேதிய லாததிங் கேறுமக்கோர் மேவுஞ்செய் குன்றமுஞ் சோலையு மாகப்பொன் வெற்பும்விண்ணோர் காவுந் தரவும்வல் லேனெனை யாளுங் கடைக்கண் வைத்தே.
|
(இ-ள்.) மேலெழுந்து தாவுதலைச் செய்யுங் கலையை ஊர்தியாயுள்ள வீரமகளுக்குக் காவலனாகிய வாணனது தென்மாறை நாடுபோல்வீர்! நீர் என்னை யேவுந்தொழில் இவ்விடத்து எனக்கு இயலாதது ஏது? எத்தொழில் செய்யவும் வல்லேன்; நுமக்கு விளையாடற்குப் பொருந்தும் ஒப்பற்ற செய்குன்றும் சோலையுமாக மேருமலையும் கற்பகக் காவும் தரவும் வல்லமையுடையேன்; என்னிடத்துக் கடைக்கண் வைத்து ஆளும்படி செய்வீர் என்றவாறு. |
வாவுதல் - தாவுதல். விந்தை - வீரமகள். `மேவுமோர் செய்குன்று` என மாறுக. `தரவும் வல்லேன்` என்புழி, உம்மை, நீர் எத்தொழில் ஏவினும் அத்தொழில் செய்யவும் வல்லேன் என்று தோன்றினமையால், இறந்தது தழீஇய எச்சவும்மை. இதனுள் செய்குன்றமும் சோலையுமாகப் பொன்வெற்பும் விண்ணோர் காவும் என்பது நிரனிறை யெனக் கொள்க. |
(81) |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 27. |