பக்கம் எண் :

கட
141
11. ஒருசார் பகற்குறி

 
       அஃதாவது,  ஒரு  கூற்றுப்  பகற்குறி.  ஒரு கூற்றுப் பகற்குறி யாதெனில்,
தலைவன்  மற்றைநாள்  தன்  வேட்கை மிகுதியால்  பகற்குறியிடத்து வந்து நிற்க,
தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக் கூறத் தலைவன் வருந்திப்
போதலாதலான் பகற்குறியாகாது, ஒருசார் பகற்குறி யாயிற்று.

  1`இரங்கல் வன்புறை இற்செறிப் புணர்த்தலென்
றொருங்கு மூவகைத் தொருசார் பகற்குறி`

கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி
மாலையம்பொழுதுகண் டிரங்கல்:
  ஆழ்ந்தார் தமக்கரு ளாதவர் போலிவ் வளவிலன்பு
சூழ்ந்தார் செலத்தொங்கல் சூழ்குழ லாய்சொற் பொருள்படைத்து
வாழ்ந்தார் புகழ்தஞ்சை வாணனைப் பேணலவர் மானவெய்யோன்
வீழ்ந்தார் கலிக்கரந் தான்பனி மாலை வெளிப்படவே.

      (இ-ள்.) மாலைசூழ்ந்த   குழலினையுடையாய்,    மிடியில்  மூழ்கினர்க்குக்
கொடாதவர்போல் இந்த மட்டில் அன்பு சூழ்ந்தார்  பிரிந்துபோகச்,  சொற்பொருள்
படைத்து வாழும் புலவராற் புகழப்பட்ட தஞ்சைவாணனை  விரும்பாதவர்  கடலில்
விழுந்து மறைதல்போல, கதிரோன் பனியொடு கூடிய மாலைக் காலம் வெளிப்படக்
கடலில் வீழ்ந்து மறைந்தான்; யான் என் செய்வேன் என்றவாறு.

      ஆழ்ந்தார் - மிடியிலாழ்ந்தார்; எனவே, ஆழ்ந்தார் தானாகவும் கொடாதவர்
தலைவராகவும் கூறியவாறாயிற்று.     சூழ்ந்தார் - பொருந்தினார்.    பேணலர் -
விரும்பாதவர். ஆர்கலி - கடல். கரத்தல் - மறைதல். பனிமாலை - அந்தியம்போது.
`வெளிப்பட்டதே` என்று பாடமோதுவாருமுளர்.

      இக்கிளவி, பாங்கியை நோக்கிக் கூறுதலும், மாலையம்பொழுதை  நோக்கிக்
கூறுதலும், தன்னுட் கூறுதலும் என மூவகைப்படும். அவற்றுள் இச்செய்யுள்
பாங்கியை நோக்கிக் கூறியது.

  2`புன்கண்ணை வாழி மருண்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை`

என்பது மாலையுடன் கூறியது.


1. அகப்பொருள் விளக்கம். களவியல் 36.
2. குறள். பொழுதுகண்டிரங்கல் - 2.