தலைமகன் என்றும் தலைமகள் என்றும் கூறப்படும் விதி யாதெனின், கோவையாதலின் கூறவேண்டும் என்பது. கோவை யாவதென்னெனின், பாட்டியலுட் கூறப்படுஞ் செய்யுட்களில் இஃதொரு செய்யுட்கோவையென்று பெயராயது. அஃது என்னையெனின், மணிகளை யோரினமா யொழுங்குபடக் கோப்பது கோவைஎன்று பெயர்; அதுபோல, இதுவும் அகப்பொருட்கிளவிகளை ஒழுங்குபடக் கோத்து நிற்றலின் கோவையென்று பெயராயிற்று என்பது.
அகப்பொருள் என்பது யாதோ வெனின்,அகத்தினாயபயன் என்பது.ஆயின், அகம் என்பது யாதோவெனின்,ஒருவனும் ஒருத்தியும் தம்முள் ஒத்தஅன்பினராய்க் கூடும் கூட்டத்தின் கண் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின் பின்னர் ஆண்டு அனுபவித்த அக்காலத்தில் இன்பம் எவ்வாறிருந்ததென்று அவ்விருவரிலொருவரை யொருவர்கேட்கின், தமக்குப் புலப்படக் கூறப்படாததாய், உள்ளத்துணர்வே அகத்தே நிகழ்தலின் அகம் எனப் பெயராயிற்று. ஆயின், அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகம் என்றது ஓர் ஆகுபெயராம் என்பது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில்அகத்திணையியல் என்பதற்கு நச்சினார்க்கினியரும் இவ்வாறே உரை கூறினாரென்றுணர்க.
பொருள் என்பது யாதோவெனின், அகத்திற்கும் புறத்திற்கும் பொது என்பது. அகத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் அகப்பொருள் எனப்படும். புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப்பொருள் எனப்படும். இனிச் சுவைஒன்பானுள் இஃது இன்பச்சுவை யென்று கூறப்படும். அச்சுவை யாவையோவெனின், வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என இவை. இவற்றுள் சாந்தம் ஒழிந்த எட்டுங் கூறப்படுவன. அவற்றுள் இச்சுவை காமம் என்று சொல்லப்படுவது. காமம் எனினும் இன்பம் எனினும் சிங்காரம் எனினும் ஒக்குமாகலின்; இக்கோவை இன்பச் சுவை யென்னப்படும்.
இஃது எனைத்து வகையாற் கூறப்பட்டதோ எனின், களவு கற்பு என்னும் இரண்டு கைகோளாற் கூறப்படும். கைகோள் என்பது யாதோவெனின், கை என்பது ஒழுக்கம், கோள் என்பது கொள்ளுதல். `நிறைகோட் பறை` என்பது போல நின்றது; எனவே, களவொழுக்கம் கற்பொழுக்கம் எனப்பட்டது.