களவாவது யாதோவெனில், தலைமகனும் தலைமகளும் கொடுப்போரும் அடுப்போரும் இன்றிப் பான்மை வகையான் தாமே யெதிர்ப்பட்டுப் 1புணர்தல் ஆதலான், இவ்வியற்குக் களவியல் என்று பெயராயிற்றென்பது. ஆயின், களவென்பது தருமநெறியன்றே இலக்கணம் பலவற்றினுங் கூறிய வழக்குப் பயிற்சியாய் வருவதென்னையெனின், களவியல் தீங்குதருவதாய் நரகத்துக் கேதுவாய செய்யத்தகாத களவு அன்றென்றறிக. அறஞ் செய்ய மறமாகவும், மறஞ்செய்ய அளமாகவும் வருதலும் உள.
அஃதென்னை யெனின், தக்கன் வேள்வி செய்ய அஃது அவனுக்கே தீங்கு தருதலான் அறஞ்செய்ய மறமாயிற்று. ஒருவன் அயலான் மனைவியைக் கைதொட்டான்; அப்போது ஒருவனைக் கரிகூறிக் கூவினாள்; கூவவே தொட்டானை அரசன் முன்னே யீர்த்துப் போய் விடக் கரியோனை அழைத்து உள்ளபடி கரி கூறவே அவனைப் போவென்று அரசன் விடுத்தான். ஆங்குப் பொய்யுரைத்தது அறமாயிற்று. இவன் கைதொட்டானெனின், அவன் தலையோடு முடியும், இனிப் பொய்யும் களவும் இரண்டும் ஒக்கும் என்ப. ஆதலான் களவினும நன்குதரு களவுமுண்டு. இக்களவு கேடு முதலிய துன்பங்களைத் தருவதன்று; என் மணத்துள் ஒரு மணமாய்க் கந்தருவ நெறியென்று மறையொழுக்கமாய்க் கூறப்பட்டதாகலின், தருமவொழுக்கம் எனப்படும்.நாகபட்டினத்தில் புத்தர் தெய்வம பசும்பொன்னாற் செய்திருந்தது. அதனை 2ஆலிநாடர் களவிற் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தனர். அவரைக் குற்றங் கூறுநர் ஒருவரும் இலராதலான், களவினும் நன்குதரு களவும் உண்டென்றறிக.
ஆயின், களவியல் என்று பெயர் கூறவேண்டுவது என்னையெனின் வேதத்தினைப பல பொருளும் மறைந்திருக்குங் காரணத்தான் மறை என்று பெயர் கூறினாற்போல, பிறரறியாமை இருவரும் கரந்த உள்ளத்தராய்க் கூடுதலான் களவியல் என்றது என்க. பின் கற்பின்வழி நின்று விளங்குதலான் குற்றமின்றெனக் கொள்க.