கைக்கிளை யென்பது யாதோ எனின், கை யென்பது சிறுமை, கிளை யென்பது உறவு; ஆகலின், சிறுமையுறவு என்பது கைக்கிளை என்று பெயராயிற்று. கைக்குடை, கைவாய்க்கால், கையரிவாள் என வழக்கிடத்துஞ் சிறுமைபற்றி வருதல் காண்க. அஃதென்னை யெனின், ஒருதலைக்காமம் என்னப்பட்டுத் தலைமகன் கூற்றாய் நிகழ்தலினான் என்க. அதனுள் இக்கிளவி காட்சியென்னப்பட்டது.
காணுமியல்பு யாதோவெனின்,முன்சொன்ன தலைவனும், கற்கந்தும் எறி போத்தும் கடுங்கண்யானையும் தறுகட்பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார் ஆளிமொய்ம்பினர் அரிமான் துப்பினர் பற்பனூறாயிரவர் கூர்வேல் இளைஞர் தற்சூழச் செல்வன் என்பது முடிந்தது. அவளும் உடன்பிறந்து உடன் வளர்ந்து நீருடனாடிச் சீருடன் பெருக்கி ஒலுடனாட்டப் பாலுடனுண்டு பல்லுடனெழுந்து சொல்லுடன் கற்றுப் பழைமையும் பயிற்சியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும்மாட்சியும் உடையார், கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதல் மகளிர் பற்பனூறாயிரவர்தற்சூழத் தாரகைநடுவண் தண்மதிபோலச் செல்வாள் என்பது முடிந்தது. முடியவே, தமியராய்ப் புணர்ந்தாரென்பதனோடு மாறுகொள்ளுமெனின், மாறுகொள்ளாது; என்னை, அவள் ஆயங்களும் பொழிலிடம் புகுதலும் விளையாட்டு விருப்பினாற் பிரியும். என்னை பிரியுமாறு எனின், ஒருவர் ஒருவரின் முன்னர்த் தழை 1விளைதக்கன தொடுத்தும் என்றும் கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும் என்றும், மயிலொடு மாறாடுதும் என்றும், குயிலொடு மாறு கூவுதும் என்றும், அருவியாடி அஞ்சுனை குடைதும் என்றும், வாசமலர்க் கொடியில் ஊசலாடுதும என்றும் பரந்து, அப்பாலுள்ளார் இப்பாலுள்ளார் கொல்லோ எனவும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளார் கொல்லோ எனவும்; இவ்வகை நினைத்துப் பிரிப என்பது.