|
அஃதாவது, தலைவி பிரிந்தவிடத்தில் தலைவன் கலங்கிக் கூறல்.
|
|
| 1`மருளுற் றுரைத்தல் தெருளுற் றுரைத்தலென் றிருவகைத் தாகும் பிரிவுழிக் கலங்கல்`
|
என்னுஞ் சூத்திர விதியால் விரிவுழிக்கலங்கல் இரண்டு வகையாகும்.
|
ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோவென்றல்: |
ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல் என்பது, தலைவியை ஆயக்கூட்டம் வந்து வழிபடுதலைக் கண்டு, இவ்வாயத்துள்ளாள் என்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ என்று மயங்கிக் கூறதல். |
| சீயங்கொ லோவெனத் தெவ்வென்ற வாணன்தென் மாறைவையைத் தோயங்கொ லோவெனு நேயநம் பால்வைத்துச் சோலைமஞ்ஞை ஆயங்கொ லோவெனு மாயத்துள் ளாளிவ் வரிவையென்ன மாயங்கொ லோநெஞ்ச மேமணம் போலிங்கு வந்துற்றதே.
|
(இ-ள்.) நெஞ்சமே, தெவ்வர் போர்க்களத்திற் பொரும்போது இவன் சிங்கமோ என்று சொல்லும்படி வெற்றியடைந்த வாணனது தென்மாறை நாட்டில் வரும் வையையாற்றினது நீரோ என்று சொல்லப்பட்ட அன்பை நம்மிடத்திலே வைத்து, சோலையிடத்துலாவும் மயிற்கூட்டமோ என ஐயங்கொடுக்கும் இவ்வாயக்கூட்டம் வழிபட நடுவே விளங்குகின்றாளாகிய இவ்வரிவை மணஞ்செய்தது போல இங்கு வந்து கூடியது யாது மாயமோ! என்றாவாறு:
|
சீயம் - சிங்கம். தெவ்வு - பகை. தோயம் - நீர். நேயம் - அன்பு. மஞ்ஞை - மயில். கொல் நான்கும் ஐயம். ஓகாரம் நான்கும் அசைநிலை. அன்றி, ஓகாரம் ஐயமெனின், கொல் அசை நிலை.
|
இங்ஙனம் தலைவி காணாததோ அணிமைக்கண் நின்ற தலைமகன், ஆயக்கூட்டத்தில் தலைவி சேர்ந்தவுடன், அவர், குறுங்கண்ணியும ் நெடுங்கோதையும் தளிரும் கொண்டு வந்து வழிபாவாரும், குற்றேவல் செய்வாரும் பல்லாண்டு கூறுவாருமாய்ச் சூழ, தாரகை நடுவண் தண்மதினோல இவள் வீற்றிருப்பதைக் கண்டு கூறியவாறென்று உணர்க. |
(29) |
|
1. அகப். விளக்கம், களவியல், சூ - 16. |