பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
62

 

(இ-ள்.)   நெஞ்சமே,   ஒளிவிரியப்பட்ட   சங்கநிதியும்  பதுமநிதியும் பூணாரமும்
செம்பொன்னும்  நவமணியும்  கொடுக்க மாறாது  நிலை பெற்றுத்,  தஞ்சைவாணன்
வெற்பில்,  மற்றத்   தொழில்களெல்லாம்  இன்பமுந்   துன்பமுமாதலின்   தாழுந்
தொழிலென்று அவற்றை யொழித்து, எஞ்ஞான்றும் இன்பந் தருவதாய தன்னுடைய
பாதத்தைப்   பணியுந்   தொழிலை  எனக்குக்  கொடுத்தாளைப்  பெற்ற  தாயும்
தந்தையும் என்னும் இவர்கள் பன்னாளும் வாழியர் என்றவாறு.

அணி - பூணாரம்.  சுடர் - ஒளி.   சங்கு - சங்கநிதி.  பங்கேருகம் - பதும நிதி.
`சங்குபங்கேருகம்`     என்புழி    உம்மைத்    தொகை.    ஆடகம் - பொன்.
மணி - நவமணி. ஓகாரம்: அசைநிலை.   தணிதல் - தாழ்தல்.  பணியும்  பணி - வணங்குந்  தொழில்.    பயத்தல் - கொடத்தல்.    பயந்தவர் - இருமுதுகுராவர்.
`இன்பமுந் துன்பமும் தணியுந்  தொழில்`   எனவும்,   `அணியுமாடகமு மணியும்` எனவும்  இயையும்.  உம்மைகள் எண்ணின்கண் வந்தன.

(32)    
கண்படை பெறாது கங்குனோதல்:
கண்படை    பெறாது    கங்குனோதல்   என்பது,    அன்றிரவில் தலைவி தந்த
வேட்கையான் துயில்பெறாது கங்குற்காலத்து நொந்து கூறல்.

 வாமக் கலையல்குல் வாணுத லார்தஞ்சை வாணன்வெற்பில்
நாமக் கலவி நலங்கவர் போது நமக்களித்த
காமக் கனலவர் கையகல் காலைக் கடும்பனிகூர்
யாமக் கடலகத் துந்தணி யாதினி யென்செய்துமே.

(இ-ள்.)  நெஞ்சமே, தஞ்சைவாணன் வெற்பில், நாம் முன் இயற்கைப் புணர்ச்சியில்
இன்பங்  கொள்ளும்   போதுஅழகு பொருந்திய மேகலை சூழ்ந்த  அல்குலையும் ஒளிபொருந்திய   நுதலையும்   உடையார்  நமக்குக்  கொடுத்த  வேட்கைக்கனல்
உள்ளடங்கியிருந்து,   அவர்  பிரிந்த  விடத்துக்  கடிய   பனிமிகுந்த இரவாகிய
கடலின்கண்   மூழ்கியுந்   தணியாது; இன்று   என்செய்யக் கடவோம் என்றவாறு.

வாமம் - அழகு.   கலை - மேகலை. நலம்: ஆகுபெயர். உவர்தல் - கொள்ளுதல்.
கையகலல் - பிரிதல்.    யாமம் - இடையிரவு.   உம்மை; சிறப்பு.  இனி - இன்று.
நெஞ்சம் : முன்னிலையெச்சம்.

`ஆயவெள்ளம்    வழிபடக்   கண்டு    இது    மாயமோ   வென்றல்` ஒன்றும்,
`மருளுற்றுரைத்தல்`; ஏனைய நான்கும், `தெருளுற்றுரைத்தல்.`

(33)    
பிரிவுழிக் கலங்கல் முற்றிற்று.
`காட்சி முதலாகக்`    `கண்படைபெறாது    கங்குனோதல்`   ஈறாகக்     கூறிய
கிளவி முப்பத்து மூன்றும் முதனாள் நிகழ்ந்ததெனக் கொள்க.