|
|
அஃதாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் மற்றைத்தினத்தில் அவ்விடத்தே வந்து தலைமகளைக் கூடுதல்.
|
| 1`தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென் றிவ்வோர் மூவகைத் திடந்தலைப் பாடே`
|
என்னுஞ் சூத்திரவிதியால் இடந்தலைப்பாடு மூவகைப்படும்.
|
தந்த தெய்வந் தருமெனச் சேறல்: |
| மன்றும் பொதியிலு மாமயில் சேர்தஞ்சை வாணன்வெற்பில் துன்றும் புயலிளஞ் சோலையின் வாய்ச்சுற வுக்குழையைச் சென்றுந்து சேல்விழி மின்னைமுன் நாள்தந்த தெய்வநமக் கின்றுந் தருநெஞ்ச மேயெழு வாழியிங் கென்னுடனே.
|
(இ-ள்.) நெஞ்சமே, மன்றினிடத்தும் பொதியிலிடத்தும் பெரிய மயில் சேருந் தஞ்சைவாணன் வெற்பிடத்து, புயல் நெருங்கிய இளஞ்சோலையினிடத்து மகரக் குழையைப் போய்த் தள்ளுங் கெண்டைபோலும் விழியையுடைய மின்னை நெருநல் தந்த விதியானது நமக்கு இன்றுஞ்சென்றால் தருமாதலான், என்னுடன் ஒருப்பட்டு எழுவாயாக என்றவாறு.
|
மன்று - ஊர்க்கு நடுவாய் எல்லாரும் இருக்கத் திண்ணை போட்டிருக்கும் மரத்தடி. பொதியில் - அம்பலமாம். எல்லாருங் கூடியிருக்கும் கூடம். என்னை, திருமுருகாற்றுப்படையுள்,
|
| 2`மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்` |
என்பதனாற் காண்க.
|
மாமயில் - ஊரில் வளர்ந்த பெரிய மயில். `புயல் துன்றும்` என இயையும். சுறவுக்குழை - மகரக்குழை. உந்தல் - தள்ளுதல். சேல்விழி: உவமைத்தொகை. மின்: ஆகுபெயர். தெய்வம் - விதி. வாழி: முன்னிலையசை.
|
(34) |
|
1. அகப். விளக்கம், களவியல். சூ - 18. 2. திருமுரு. 226.
|
|
|