பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
64

 
முந்துறக் காண்டல்:
முந்தறக்காண்டல் என்பது, முந்துபோலக் காண்டல்.

 1மருவாய் நாப்பண் மயிலுரு வாய்நென்னல் வாணன்தஞ்சைத்
தருவாய்த் தழைகொய்து தண்புனங் காத்துந் தடங்குடைந்து
திருவாய் மலர்ந்து சிலம்பெதிர் கூயின்றொர் தெய்வதப்பெண்
உருவா யொருதனி யேநின்ற தாலென் னுயிர்க்குயிரே.


(இ-ள்.)   நெஞ்சமே,  நெருநல்   பொருந்திய  ஆயக்கூட்டத்து நடுவே  மயிலின்
வடிவாக  இற்றைப்பொழுது  வாணனது  தஞ்சைச் சோலையிடத்துத் தழைகொய்து, மழைபெய்தலாற்   குளிர்ந்த  புனங்காத்து,  வாவியில்  நீராடி, திருவாய்   திறந்து
மலையெதிர்   கூவி,  ஒப்பற்ற   தெய்வப்பெண்ணருவாய்,   ஒப்பற்ற    தனியே யென்னுயிர்க்குயிர் நின்றது, காண்பாயாக என்றவாறு.

ஆயநாப்பண் - ஆயக்கூட்டத்து   நடு.   தரு: சாதியொருமை.   தடம் -  வாவி.
சிலம்பெதிர் கூவுதல் - ஒர் விளையாட்டு. ஆல்: அசை. நெஞ்சம்:
முன்னிலையெச்சம்.

(35)    
முயங்கல்:
முயங்கல் என்பது புணர்தல்

 2மானா கரன்தஞ்சை வாணன் வரோதயன் மாறையன்னாள்
தானாவி நின்றலர் தாமரை யேஅத் தடமலர்வாய்
ஆனா தொழுகுசெந் தேனல்லி மேவு மரசவன்னம்
யானா கிடைப்பது வேயின்ன பான்மை யிருவர்க்குமே.

(இ-ள்.)    மானத்துக்குப்    பிறப்பிடமாய்    வரத்திலுதித்த   தஞ்சைவாணனது
மாறைநாடு   போல்வாள்   வாவியினின்று   மலர்ந்த   தாமரை,    அவ்வாவித்
தாமரையிடத்து     நீங்காமலொழுகுஞ்   செந்தேனையுடைய    அகவிதழின்கண்
மேவியிருக்கும்   அரசவன்னம்  யானாயினேன்;  ஆ,  இத்தன்மை  யிருவர்க்குங்
கிடைக்கத்தக்கதோ என்றவாறு.

எனவே,   ஊழ்வினைப்   பயத்தானன்றி   முயற்சியாற்   கிடைக்கத்    தக்கதோ
என்றவாறாயிற்று.  மானாகரன்,  வரோதயன்   இவ்விரண்டும்   வடசொல்  முடிபு;
வினைமுற்று வினையெச்சமாய்த் திரிந்தது. தான் : சந்தவின்பப் பொருட்டு வந்தது.
ஆவி - வாவி.  ஆனாது - நீங்காது. அல்லி - அகவிதழ்.  ஆ: அதிசயக் குறிப்பு.
கிடைப்பது - அரிதாகிய பொருள் வாய்ப்பு. ஏகாரம்: ஈற்றசை.

(36)    

1. அகப். விளக்கம், களவியல். சூ - 18.
2. திருமுரு. 226.