பக்கம் எண் :

5

46

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

5. முத்தப்பருவம்

    கத்துந் தரங்கம் எடுத்தெறியக்
        கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
    கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
        கான்ற மணிக்கு விலையுண்டு

    தத்துங் கரட விகடதட
        தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
    தரளந் தனக்கு விலையுண்டு
        தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்

    கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
        குளிர்முத் தினுக்கு விலையுண்டு
    கொண்டல் தருநித் திலந்தனக்குக்
        கூறுந் தரமுண் டுன்கனிவாய்

    முத்தந் தனக்கு விலைஇல்லை
        முருகா முத்தந் தருகவே
    முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
        முதல்வா முத்தந் தருகவே.

    (அ-ரை)  கத்தும்-முழங்கும்.  தரங்கம்-அலை. கடுஞ்சூல்-கடுமையான கருப்பம்.  உளைந்து-வருந்தி.  வாலுகம்-வெண்மணல்.  கான்ற மணி - சொரிந்த முத்து.  கரடம்-மதம்.  விகடம்-விகடக் கூத்து, உன்மத்தமுமாம்.  தடம்-மலை.  தந்திப் பிளைக்கூன் மருப்பு-யானையின் பிறைச் சந்திரன்போல் வளைந்திருக்கின்றகொம்பு.  தரளம்-முத்து.  சாலி-நெல். கொண்டல்-மேகம்.  நித்திலம்-முத்து.  கனிவாய் முத்தம்-கொவ்வைக் கனிபோன்று வாயின் முத்தம்

(41)