பக்கம் எண் :

10கலிங்கத்துப்பரணி

நடையழகு கூறி விளித்தது

23. சுரிகுழல் அசைவுற அசைவுறத்
     துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலியெழ ஒலியெழப்.
   பனிமொழி யவர்கடை திறமினோ.

     (பொ-நி)பனிமொழியவர்!  குழல்  அசைவுற  அசைவுற, மயில் என
மயில் என, ஒலி எழ ஒலி எழ திறமின்; (எ-று)

     (வி-ம்.)சுரிதல்-நெளிதல். குழல்-கூந்தல்.  துயில்-தூக்கம்.  பரிபுரம்-
கிண்கிணி.  பனி  மொழி -  குளிர்ந்த (இனிய)  மொழி.  குழல்  அசைய,
பரிபுரம் ஒலிக்க, மயிலென வருபவர் என்க(3)

கனவுநிலை கூறி விளித்தது

24.கூடிய இன்கன வதனிலே
     கொடைநர துங்கனொடு அணைவுறாது
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர்
   உமது நெடுங்கடை திறமினோ.

     (பொ-நி.) கனவதனிலே,   அணைவுறாது,   ஊடிய  நெஞ்சினொடு
ஊடுவீர் திறமின்; (எ-று)

     (வி-ம்.) கூடிய   -  வந்தடைந்த.   நரதுங்கன்  - குலோத்துங்கன்.
அணைவுறாது - தழுவிப்புணராது.  ஊடிய - பிணங்கிய.  நெஞ்சு - மனம்.
கனவிற் கண்ட குலோத்துங்கனைப் புணராது விட்ட நெஞ்சினை நொந்தன
ரென்க.                                                    (4)

ஊடல்நிலை கூறி விளித்தது

25.விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
     வெகுளி மென் குதலை துகிலினைப்
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய்
   பெடைந லீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி) "விடுமின்" "விடுமின்"   என்று  முனிகுதலை,  "பிடிமின்"
என்ற  பொருள்  விளைய, அருள்  செய் பெடைநலீர், திறமின்; (எ-று)