பக்கம் எண் :

106கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)   ஒருவரை  ஒருவர்  கைம்மிக்குக்  கோயில்  சோம்பி,
அரிவையர்கற்பின் மாறி, அரண்கள் அழிய ; (எ-று.)

     (வி-ம்.)  கைம்மிகுதல்  -  கீழ்ப்படுத்து   மேம்படல்.  உம்பர் -
கடவுளர்  சோம்புதல்:  பூசையின்றி   அவிந்துகிடத்தல்;   அரிவையர் -
பெண்கள்.  அரண்: அவ்வவர் நிற்றற்குரிய ஒழுக்கவரம்பு.
                                                        (29)

குலோத்துங்கன் சோழநாடு எய்தியமை

261.கலியிருள் பரந்த காலைக்
      கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகடல் அருக்க னென்ன
     உலகுய்ய வந்து தோன்றி,

     (பொ-நி.)  இருள்  பரந்த  காலை,   இருள்  கரக்கத் தோன்றும்
அருக்கன்என்ன வந்து தோன்றி; (எ-று.)

     (வி-ம்.)கலி - துன்பம்.  பரந்த காலை - பரவிய காலத்தில். ஒலி-
ஓசையுடைய.  கரத்தல்   -   மறைதல்.   அருக்கன் - ஞாயிறு. உய்ய-
பிழைக்கும்படி.                                            (30) 

 நாட்டை நிலைபெறுத்தியது

262.காப்பெலாம் உடைய தானே
      படைப்பதும் கடனாக் கொண்டு
கோப்பெலாம் குலைந்தோர் தம்மைக்
     குறியிலே நிறுத்தி வைத்தே,

     (பொ-நி.)  தான்  கடனாகக்  கொண்டு  குலைந்தோர்  தம்மைக்
குறியிலேநிறுத்தி வைத்து; (எ-று.)

     
(வி-ம்.)  காப்பு  -  உலகைக்  காத்தல்.  கோப்பு-நிற்கவேண்டிய
நடைமுறை. குறி - நிற்கவேண்டிய  நிலை. நிறுத்திவைத்து  நிலைபெறச்
செய்து.                                                  (31)

குலோத்துங்கன் மங்கலநீராடியது

263.விரிபுனல் வேலை நான்கும்
      வேதங்கள் நான்கு மார்ப்பத்
திரிபுவ னங்கள் வாழ்த்தத்
     திருஅபி டேகஞ் செய்தே,