பக்கம் எண் :

108கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  புலிவளர்  கொடி   எடுத்தலும்,   அமரர்கள்   கொடி
எடுத்தன; (எ-று.)

     (வி-ம்.)  பொது  அற - பொது   அன்றாகிக்   குலோத்துங்கற்கே
உரிமையாக. கைகொடு   -  கைப்பற்றிக்கொண்டு.  அமரர்கள்  கொடி-
கடவுளர்க்கு விழாவின் பொருட்டு  எடுக்கும்  கொடி. (கோயிலுள் பூசையும்
விழாவும்  பொலியத் தொடங்கின என்க.)                     (35)

கொற்றக்குடை கவித்தமை

267.குவிகைகொ டரசர் சுற்றிய
      குரைகழல் அபயன் முத்தணி
கவிகையின் நிலவெ றித்தது
     கலியெனு மிருளொ ளித்ததே.

     (பொ-நி.)  அபயன்   கவிகையின்  நிலவு   எறித்தது,  கலிஎனும்
இருள் ஒளித்தது; (எ-று.)

    
 (வி-ம்.)  குவிகை  -  வணங்கிய  கை.   குரைத்தல்  - ஒலித்தல்.
கவிகை - வெண்கொற்றக்குடை.  நிலவு  எறித்தது  - ஒளி வீசியது.  கலி-
துன்பம். இருள் ஒளித்தது-இருட்டு நீங்கிற்று.                      (36)

 இதுவும் அது

268.அரனுறை யும்படி மலைகள்
      அடையவி ளங்கின அனையோன்
ஒருதனி வெண்குடை உலகில்
     ஒளிகொள் நலந்தரு நிழலில்.

     (பொ-நி.)  அனையோன்   வெண்குடை   ஒளிகொள்   நிழலில்,
மலைகள் அடைய, அரன் உறையும்படி விளங்கின, (எ-று.)

    
 (வி-ம்.)   அரன் - சிவன்.  உறையும்படி - இருக்குமாறு.  அடைய:
எல்லாம் என்றபடி.   விளங்கின:   வெண்ணிறம்  பொருந்தி  (வெள்ளிக்
குன்றுபோல்) விளங்கின  என்க.  அனையோன் -  அத்தன்மையோனான:
குலோத்துங்கன். ஒளி-வெள்ளொளி.                             (37)

குலோத்துங்கன் புகழ் மேம்பாடு

269.அரிதுயி லும்படி கடல்கள்
      அடையவி ளங்கின கவினின்
ஒருகரு வெங்கலி கழுவி
     உலவுபெ ரும்புகழ் நிலவில்.