பக்கம் எண் :

125


11. காளிக்குக் கூளி கூறியது

     கலிங்கப் போரைக்  கூறுமாறு  கேட்ட  காளிக்குக் கலிங்கப்  பேய், முதலாவதாக அப்போர்க் காரணத்தைக் கூறத்தொடங்குகிறது.

     குலோத்துங்கன்   காஞ்சியில்  தென்மேற்குத்  திசையில்  அமைந்த மாளிகையில், செய்தமைத்த  சித்திரமண்டபத்தில்,  முத்துப்   பந்தரின்கீழ் வெண்கொற்றக்குடை நிழற்றவும், இருபுறமும் கவரி வீசவும்  அரியணையின்
மீதமர்ந்திருந்தனன்.

     தன்  இருதேவிமாரும்,  உடன்இருக்கவும்,  இசையினும்   கூத்தினும் வல்லமகளிர் பலர் நெருங்கியிருக்கவும், சூதர், மாகதர்,   மங்கலப்  பாடகர் முதலியோர்     புகழ்பாடவும்,     வீணையாழ்,     குழல்,     மத்தளம்
வல்லோர்சூழ்ந்திருந்து அரசன் குறிப்பை  எதிர்நோக்கியிருக்கவும், தாளமும் பண்ணும் பிழையாவகை   பாடுவோர்   பாட   அதைக்கேட்டும்,   குற்றம்
ஆராய்ந்தும் மகிழ்ந்தும் மன்னன்   இருக்கவும்,  சிற்றரசர்  பலர்  சாமரை
இரட்டவும், வென்றுகொண்ட    மன்னர்தம்   தேவிமார்பலர்  சேடியராய்த்
திகழவும்,     கருணாகரன்   முதலான   அமைச்சர்கள்     அடிவணங்கி
நெருங்கியிருக்கவும்,    அரண்மனை     வாயிலில்  திறையுடன்வந்துநின்ற அரசர்கள்   ஆணை  பெற்று  உள்ளே  வந்து   சூழ்ந்துநின்று   தங்கள்
திறைப்பொருள்களை ஒவ்வொன்றாகக் காட்டிச் செலுத்தினர்.

     குலோத்துங்கன் அவ்வரசர்கட்கருள் செய்து   'திறைசெலுத்தாதோரும்
உளரோ' எனக்   கேட்க   'வடகலிங்கவேந்தன்   இருமுறையாகத்   திறை
செலுத்தவில்லை'   என்றனர்.  அதுகேட்ட  குலோத்துங்கன்  முறுவலித்துப்
படையுடன் சென்று அவனைக்கொண்டு வருமாறு பணித்தனன்.

      இங்ஙனம்   கூறிய   அளவில், கருணாகரத் தொண்டைமான் தானே
போர்  மேற்   சென்று  அங்ஙனம்  செய்வதாகக்   கூறி   விடைவேண்ட,
குலோத்துங்கனும் விடையளித்தனன்.

     உடனே      நாற்படையும்   திரண்டன;   சங்குமுழங்கின;   முரசு
அதிர்ந்தன;   இயமரம்  இரட்டின;  கொம்பு   ஒலித்தன;  குடைநிழற்றின;
கொடி    விளங்கின.    இங்ஙனம்    புறப்பட்ட   சேனை பகலெல்லாம்
சென்றும், இரவுதங்கியும்,  வழிக்கொண்டது.  கருணாகரன் யானைமீதூர்ந்து
சென்றனன். அவன் தமையனாகிய   பல்லவவேந்தனும்  யானைமீதுஊர்ந்து
உடன்  சென்றனன்.  வாணகோவரையன்   குதிரைமீதூர்ந்து   சென்றனன். முடிகொண்ட சோழனும் யானைமீதூர்ந்து சென்றனன்.