பக்கம் எண் :

128கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  தாரகை  வானின்  முகட்டு  எழுந்த மதிக்கு ஒப்பு என
நித்திலப் பந்தரில் வெண்குடை ஒன்று நிழற்ற; (எ-று.)

     (வி-ம்.) மொய்த்து -நெருங்கி. தாரகை - உடுக்கூட்டம். முகடு -உச்சி.
நெய்த்து -நெய்த்தன்மைதோற்றி  (வழவழப்பாயும்  பளபளப்பாயும் தோற்றி)
நித்திலம் முத்து. நிழற்ற-நிழலைச் செய்ய.                        (5)

வெண் கொற்றக் குடைக்கீழ் வெண்சாமரை வீச இருந்தமை

317.மேற்க வித்த மதிக்குடை யின்புடை
      வீசு கின்றவெண் சாமரை தன்றிருப்
பாற்க டல்திரை ஓரண் டாங்கிரு
     பாலும் வந்து பணிசெய்வ போலவே.

     (பொ-நி.)மேல்கவித்தமதிக் குடையின் புடைவீசுகின்ற வெண்சாமரை,
பால்கடல் திரை பணிசெய்வ போல; (எ-று.)

     (வி-ம்.) மேல்கவித்த - மேலேகவிந்திருக்கின்ற. புடை. பக்கம். திரை-
அலை, இருபாலும்-இருபக்கமும். பணிசெய்வ - பணிவிடை செய்வன.    (6)

சிம்மாதனத்தில் இருந்தமை

318.அங்கண் ஞால மனைத்தும் புயத்தில்வைத்
      தாட கக்கிரி யில்புலி வைத்தவன்
சிங்க ஆசனத் தேறி யிருப்பதோர்
     சிங்க ஏறெனச் செவ்வி சிறக்கவே.

     (பொ-நி.)   ஞாலம்   அனைத்தும்   புயத்தில்   வைத்து,  கிரியில்
புலிவைத்தவன் சிங்க ஏறு எனச் செவ்வி சிறக்க; (எ-று.)

     (வி-ம்.)  அங்கண்  - அழகிய  இடம். ஞாலம்  - உலகம். ஆடகக்
கிரி-மேருமலை. சிங்க ஆசனம் - அரியணை. சிறக்க-மேம்பட.  ஏறு-ஆண். செவ்வி-அழகு.                                             (7)