பக்கம் எண் :

176கலிங்கத்துப்பரணி

கருணாகரன் போரில் முனைதல்

443.அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
      அரசன் அரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ்கரு ணாக ரன்றன
     தொருகை இருபணை வேழம் உந்தவே.

     (பொ-நி.)  செருமுதிர்   பொழுது,  வண்டையர்   அரசன்,   மந்திரி,
கருணாகரன் வேழம் உந்த; (எ-று.)

     (வி-ம்.) அலகு - அளவு. செரு - போர். முதிர்பொழுது-முற்றியபோது.
அரசர்கள் நாதன்: குலோத்துங்கன். கை - துதிக்கை. பணை - தந்தம். உந்த-
செலுத்த; ஓட்ட                                            (40)

வெற்றிகாண இருபடையும் ஒருமுகப்பட்டமை

444.உபய பலமும்வி டாது வெஞ்சமம்
      உடலு பொழுதினில் வாகை முன்கொள
அபயன் விடுபடை ஏழ்க லிங்கமும்
     அடைய ஒருமுக மாகி முந்தவே.

     (பொ-நி.) உபய பலமும் உடலு பொழுதினில்,  அபயன் விடுபடை(யும்)
ஏழ் கலிங்கமும், ஒருமுகமாகி, வாகைகொள, முந்த; (எ-று.)

     (வி-ம்.) உபயம் - இரண்டு. பலம் - சேனை. சமம் - போர். உடலுதல்-
சினந்தெழுதல். வாகை - வெற்றி. அபயன்-குலோத்துங்கன். அடைய-முழுதும்
ஒருமுகம்  ஆகி-ஒன்றுபட்டு. இதுவரை பரந்துபட்டுப்  போர்செய்த படைகள்
இரண்டும் தாம் ஒருமுகப்பட்டன என்க. முந்த-முற்பட்டுப் பொர.  
                                                       (41)

இருபடையும் கிளர்ந்தெழுந்தமை

445.அணிகள் ஒருமுக மாக உந்தின
      அமரர் அமரது காண முந்தினர்
துணிகள் படமத மாமு றிந்தன
     துரக நிரையொடு தேர்மு றிந்தவே.

     (பொ-நி.)  அணிகள்   உந்தின;   அமரர்   அமரது காணமுந்தினர்;
மதமா முறிந்தன; துரகநிரையொடு தேர் முறிந்த; (எ-று.)