கணவரைத் தேடிய மனைவியர் செயல் 481. | தங்கணவ ருடன்தாமும் போக வென்றே | | சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார் எங்கணவர் கிடந்தவிடம் எங்கே யென்றென்று இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின். |
(பொ-நி.) கனவருடன் தாமும் போக என்று,"கிடந்த இடம் எங்கே" என்று என்று சாதகரைக் கேட்பார் ; தடவிப்பார்ப்பார் ; இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் ! (எ-று.) (வி-ம்.) சாதகர் - காளியின் மெய்காப்பாளர். தடவிப்பார்ப்பார் -தேடிக்காண்பர். இடாகினி - சுடலைப் பிணம் தின்னும் பேய். (10) கணவனைக்கண்டு ஆவிசோர்ந்த மனைவி இயல்பு 482. | வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி | | மணியதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின். |
(பொ-நி.) தலை மகனை நோக்கி ," வடு உண்டாயோ? மடித்துக் கிடந்தது(நன்று!)" எனப் புலவி கூர்ந்து, ஆவிசோர்வாளைக் காண்மின்! (எ-று.) (வி-ம்.) தலைமகன் - கணவன். மணி - அழகிய. அதரம் - உதடு. மடித்து:மடிந்து என்பதன் வலித்தல் விகாரம் : புலவி - வெறுப்பு (வெற்றிபெற்று மீளாது மடிந்து வீழ்ந்தமையின்). கூர்தல்-மிகுதல். ஆவி-உயிர். சோர்வாள்-குறைபவள். (11) கணவனைத் தழுவி உயிர்விட்ட பெண்டிர் இயல்பு 483. | தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத் | | தாங்காமல் தன்னுடலாற் றாங்கி விண்ணாட் டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின். | (பொ-நி.) கொழுநன் உடலம்தன்னைத் தரைமகள் தாங்காமல் தன உடலால் தாங்கி, அரமகளிர் புணரா முன்னம் ஒக்கஆவி விடுவாளைக் காண்மின்;(எ-று.) |