பக்கம் எண் :

31


    (பொ-நி.)  காஞ்சிக்கும்  வடமலைக்கும்  நடுவே  வேடனை  விட்டு,
கானகத்தே உயிர் பறிப்பீர் திறமின்; (எ-று.)

    
(வி-ம்.)நக் காஞ்சி - சிறந்த மேகலை;  காஞ்சி  நகரம். வட மலை-
மாலை  அணிந்த கொங்கைகள்; இமயமலை. நடுவில்-நடுவிடத்தே எனவும்,
நடுவுஇல்  நடுஇடம்  இல்லாத எனவும் இருபொருள் நயங் காண்க. வெளி-
இடுப்பு;  போர்க்களம்.  வேடனை - வேள்தனை -மன்மதனை; வேடனைப்
போன்ற  கருணாகரனை.  கானகத்தே - கான்நகத்து;  மணம் பொருந்திய
மலைபோன்ற கொங்கைகளால். கானகத்தே-காட்டையடுத்த விடத்தே. (53)

மனங்கவரும் இயல்பு கூறி விளித்தது

74. செக்கச் சிவந்த கழுநீரும்
     செகத்தில் இளைஞ ராருயிரும்  
ஒக்கச் செருகும் குழன்மடவீர்
   உம்பொற் கபாடம் திறமினோ.

    (பொ-நி.)கழுநீரும், இளைஞர் ஆருயிரும் செருகும் குழல் மடவீர்,
திறமின்;(எ-று.)

    
(வி-ம்.)செக்கச் சிவந்த-மிகச் சிவப்பான. கழுநீர்-கழுநீர்ப்பூ. செகம்-
உலகம். குழல்-கூந்தல். பொன்-அழகு.                          (54)

3. காடு பாடியது

     [கலிங்கப்   போர்க்களத்தில் பரணிக்கூழைப்  பேய்கள்  பெறுமாறு
செய்த  பேய்களின்  தலைவியாகிய  காளியைக்  கூறப் புகுந்த ஆசிரியர்,
அவள் உறையும் இடமாகிய பாலை நிலத்தைச் சார்ந்த காட்டின் இயல்பை முதலாவதாகக் கூறுகின்றார்.]

     [அக்காட்டில்   கதிரவன்  தெறுதலால்  பொரிபொரியாய்ப்  போன
காரையும்,  கரிந்துபோன  சூரையும்  முதலான  செடிகளும்,  கொடிகளும்,
மரங்களுமே   எங்கும்  காட்சியளிக்கின்றன.  பருந்துகளும்,  புறாக்களும், மான்களும்    ஆண்டாண்டுச்   சில   இடங்களில்   காணப்படுகின்றன.
ஒவ்வோரிடங்களில்   மரப்பொந்துகளில்   பாம்புகள்  தலைநீட்டுகின்றன.
கானல்நீர்  எங்கும்  காட்சியளிக்கின்றது.  நாக இரத்தினங்களும் மூங்கில்
முத்துக்களும்   ஆண்டாண்டு   சிதைந்து  கீழே  வீழ்ந்து  கிடக்கின்றன.
இங்ஙனம்   பாலையின்   கொடுமை   தோன்றுமாறு,   காளி  உறையும்
இக்காட்டை ஆசிரியர் கூறும் திறம் பெரிதும் உணர்ந்து மகிழத்தக்கது.